*🛡️ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் / இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை / பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும் ! / அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் ! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*
*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 18/2021 நாள்: 17.10.2021*
*_ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கைவிடவேண்டும்!_*
*_அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்!_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!*
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_
*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாகத் தமிழகத்தில் நேரடி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின்றி முடங்கிக்கிடந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் 01.11.2021 முதல் நேரடி வகுப்புக்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.*
*⚔️*
*🛡️பள்ளிகள் திறப்பைத் தொடர்ந்து, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கு வாங்க வேண்டிய கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தனது செயல்முறை ஆணையில் பள்ளிக்கல்வி ஆணையர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.*
*⚔️*
*🛡️ஆனால், பள்ளிக்கல்வி ஆணையரின் ஆணையில் குறிப்பிட்டவாறு பள்ளிகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்குரிய நிதி வசதி பள்ளிகளில் இல்லை. மேலும், இக்கல்வியாண்டில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கிட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.*
*⚔️*
*🛡️மேலும், தற்போது பூஜ்யக் கலந்தாய்வு தொடர்பான செய்திகள் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் "ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்படாது என்று அமைச்சர் திட்ட வட்டமாக குறிப்பிடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வு என்பது முற்றிலும் தேவையற்றது என்பது எங்களது அமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.*
*⚔️*
*🛡️மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 விதமான வரையறைகள் வைத்துள்ளோம். பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கும் போது அது குறித்துத் தெரிவிப்போம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பதட்ட நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.*
*⚔️*
*🛡️ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. எனவே, குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி. ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றும் போது தான் பள்ளிச் சூழல், பள்ளியின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத்துடன் அப்பகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்படும்.*
*⚔️*
*🛡️அதுமட்டுமல்ல 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்த பணி ஓய்வை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். அவர்களை இடமாற்றம் செய்வது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைந்துவிடும். எனவே, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய மேற்கண்டவாறான இடமாறுதல் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை முற்றிலுமாகக் கைவிட்டு விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில் நேர்மையான வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔️*
*🛡️19 மாதங்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து கற்றலில் ஈடுபடவுள்ள சூழலில், மாணவர்களை கல்விச் சூழலுக்கு, பள்ளிச் சூழலுக்கு கொண்டு வருவதற்குரிய மிக மிக முக்கியமான பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அப்பணியில் கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் முழுமூச்சோடு ஈடுபட உள்ள ஆசிரியர்களிடம் குழப்ப நிலையை ஏற்படுத்தக்கூடிய பதட்ட நிலையை உருவாக்கக் கூடிய இதுபோன்ற அறிவிப்புக்களை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔️*
*🛡️ஜீரோ கவுன்சிலிங், 10, 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்த ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தினால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலந் தழுவிய போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதையும் மாநில அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.*
🤝இப்படிக்கு,
*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*