Tuesday 22 June 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு-இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் கொரோனா நோய்த்தடுப்பு களப்பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட திமிரி ஒன்றிய தலைமையாசிரியர் திருமதி R.சுந்தரி அவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரி�

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு-இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் கொரோனா  நோய்த்தடுப்பு களப்பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட திமிரி ஒன்றிய தலைமையாசிரியர் திருமதி R.சுந்தரி அவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு.முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை*

தஆஆகூ/மாஅ கடித எண்: 35/2021, நாள்: 19.06.2021

*பெறுநர்*

மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 9.
மாண்புமிகு ஐயா,

*பொருள்:*

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்
பேரில்
மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலரின்
ஆணையின்படி கட்டாயமாக கொரோனா நோய்த்தொற்றுக்
கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் களப்பணியில்
ஈடுபடுத்தப்பட்ட திமிரி ஒன்றிய ஆரம்பப்பள்ளித் தலைமை
ஆசிரியை திருமதி.R.சுந்தரி என்பார் நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டு 01.06.2021ல் உயிரிழப்பு தலைமை
ஆசிரியையின் குடும்பத்திற்கு கொரோனா பணியில் உயிரிழந்த
முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்
தொகை ரூபாய் 25 லட்சம் வழங்கிட வேண்டுதல் சார்பு.

*பார்வை:*

⚡1. இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின்
செயல்முறைகள் ந.க. எண்: அ2/059/2020 நாள்: 05.2021

⚡2.
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1861/ஆ4/2021 நாள்:
05.2021

⚡3. திமிரி வட்டார வளர்ச்சி
அலுவலர் (கி.ஊ)
செயல்முறைகள் ந.க.எண்: 670/2020 நாள்: 10.05.2021

⚡4. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளரின் கடிதம் நாள்:
04.06.2021.

🛡️பார்வை 1ல் கண்ட இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின்
உத்தரவின்படி இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சிகள் அளவில்
கொரோனா நோய்த் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அக்குழுவில் அந்தந்த ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்,
ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர் அல்லது கிராம உதவியாளர், அங்கன்வாடிப்
பணியாளர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றனர்.

🛡️இக்குழுவினர்
நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊராட்சிப் பகுதிகளில் வீடு
வீடாகச் சென்று நோய்த் தொற்றுக் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட
உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் பார்வை 2ல் கண்ட இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலரின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் 10.05.2021 முதல் ஆசிரியர்கள்
நோய்த்தொற்றுக் கண்காணிப்புக் களப்பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். களப்பணிக்கு
வராத ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு
நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று அந்த உத்தரவில் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் தெரிவித்து ஆசிரியர்களை அச்சுறுத்தினார்.

"ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி கொரோனா நோய்த்தடுப்புக் களப்பணிகளில்
ஈடுபடுத்த வேண்டாம். விருப்பமுள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்"

என்று தமிழக
அரசு அறிவித்திருந்தும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக்
கல்வித்துறை அதிகாரிகளும் அதைப் பின்பற்றவில்லை.

🛡️50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள்
மற்றும் இணை நோய் உள்ளவர்கள் ஆகியோரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று
வலியுறுத்தியும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

🛡️இந்நிலையில் பார்வை 3ல் கண்ட திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)
உத்தரவின்படி திமிரி ஒன்றியம், அல்லாளச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின்
தலைமை ஆசிரியர் திருமதி.R.சுந்தரி என்பார் கொரோனா நோய்த்தொற்றுக் கண்டறியும்
களப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.
56 வயதான தலைமை ஆசிரியை திருமதி.R.சுந்தரி அவர்கள் தனக்கு சர்க்கரை
நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளதைக் கூறி தனக்கு அப்பணி
வேண்டாம் என்று திமிரி வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் அதை
ஏற்காமல் சிறிதும் மனிதாபிமானமின்றி பணிக்கு வரவில்லையென்றால் நடவடிக்கைக்கு
உள்ளாக நேரிடும் என்று அச்சுறுத்தி களப்பணியில் ஈடுபடுத்தினர்.
வேறுவழியின்றி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது பணியைப்
பாதுகாத்துக் கொள்வதற்காக உயர் அலுவலர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து 10.05.2021
முதல் கொரோனா நோய்த்தொற்றுக் களப்பணியில் வீடு வீடாகச் சென்று நாள்தோறும் காலை
9 மணி முதல் மாலை 5 மணி வரை உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல்
பணியாற்றினார்.

🛡️அதன் விளைவாக தலைமை ஆசிரியை திருமதி.R.சுந்தரி அவர்கள்
கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 01.06.2021 அன்று காலமானார். கொரோனாவின்
இரண்டாவது அலையில் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா
நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

🛡️ஆனால், தலைமை ஆசிரியை திருமதி.R.சுந்தரி
அவர்களின் இறப்புக்கு இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும், இராணிப்பேட்டை மாவட்டக்
கல்வித்துறை அதிகாரிகளுமே காரணமாகும்.

🛡️தலைமை ஆசிரியை திருமதி. R.சுந்தரி அவர்களின் இறப்பு அவரது
குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே, அவரது குடும்பத்திற்கு கொரோனா நோய்த்
தடுப்பு முன்களப் பணியாளர்களின் உயிரிழப்புக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை 25
லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பார்வை 4ல் கண்ட மனுவை எங்கள் அமைப்பின்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக்கிளை ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கு அனுப்பியும்
இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

🛡️எனவே, தாங்கள் உயிரிழந்த மேற்படி தலைமை ஆசிரியையின் குடும்ப நலன்
கருதி அவரது குடும்பத்திற்கு உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு
வழங்குவது போல் ரூபாய் 25 லட்சம் வழங்கி உதவிட பெரிதும் வேண்டுகிறோம். அதேபோன்று
தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக் களப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்
உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்திட வேண்டும்
எனவும் வேண்டுகிறோம்.

🛡️தங்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு
அரசின் உத்தரவை மீறிச் செயல்பட்ட இராணிப்பேட்டை மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள்
மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில அமைப்பு தங்களைப் பெரிதும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

✍️தங்கள் உண்மையுள்ள,

ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை
பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

ஊடகச் செய்தி
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2021 நாள்: 17.06.2021

🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை
பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

✍️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில
பொதுச்செயலாளர் ச.மயில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது.

🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான
வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30 முடிய
9 நாட்கள் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அன்றைய தமிழக அரசால் பழிவாங்கும்
நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

🛡️வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு)
விதி 17(B) மற்றும் 17(E) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதோடு, தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.
பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு பணிமாறுதல்
செய்யப்பட்டனர். வேலைநிறுத்த நாட்கள் ஊதியமில்லா விடுப்புக்காலமாக
கருதப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, தேர்வுநிலை, சிறப்புநிலை,
ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றைப் பெற
இயலாமல் மிகவும்
பாதிக்கப்பட்டனர்.

🛡️இந்நிலையில் மேற்கண்ட ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான
அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும்
திரும்பப் பெற்றுக்கொள்வதாக அப்போதைய தமிழக அரசு சட்டமன்றத் தேர்தல்
நெருங்கும் வேளையில் பார்வையில் கண்ட அரசாணையை வெளியிட்டது.

🛡️அதன்படி சில துறைகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் சில மாவட்டங்களில் மேற்கண்ட ஒழுங்கு
நடவடிக்கைகள் இன்றுவரை திரும்பப் பெறப்படவில்லை என்பதைத் தங்களின்
மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். 

🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறையில்
மேற்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று அதற்குரிய
ஆணைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக
வழங்கிட தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

🛡️மேலும், ஆசிரியர் - அரசு ஊழியர்கள் நலனில் மிகுந்த அக்கறை
கொண்ட தாங்கள், பார்வையில் கண்ட அரசாணையைக் கணக்கில் கொண்டும்,
கடந்தகால ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டங்களின் முடிவில் பின்பற்றப்பட்ட
நடைமுறைகளைப் பின்பற்றியும் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட
நாட்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்க நாட்கள் ஆகியவற்றை பணி
நாட்களாகக் கருதி வரைமுறைப்படுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கையாக பணி
மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து
அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணியமர்த்திடவும் உரிய
ஆணை வழங்கி உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பெரிதும் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறோம்.

✍️இப்படிக்கு,

ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி