Monday, 9 May 2022

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2022  நாள்: 09.05.2022_

*🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:*

*🛡️தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது என்று கூறியுள்ள நிதியமைச்சரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

*🛡️கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் வரிசை எண்: 309ல் கொடுத்துள்ள மிக முக்கியமான வாக்குறுதி "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்பதாகும். தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமல்லாது இன்றைய முதலமைச்சர் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்" என்று கூறினார்கள். அதுமட்டுமல்லாது தேர்தல் பிரச்சாரக் காணொளிகளிலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வாக்குறுதி அழுத்தந்திருத்தமாக வெளியிடப்பட்டது.*

*🛡️இத்தகு சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு எதுவும் அறிவிக்காத நிலையில், 07.05.2022 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு "பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர இயலாது" என்று தெரிவித்திருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.*

*🛡️சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேசிய பேச்சு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக நினைத்துக்கொண்டு பேசியதைப் போல் உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி தேசிய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் (PFRDA) செலுத்திய தொகையை PFRDA தர மறுத்து விட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார்.*

*🛡️தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து PFRDA உடன் ஒப்பந்தம் செய்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தோடு, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இதுவரை இணையாமல் PFRDA உடன் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் ஊழியர்களிடமிருந்து தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்திற்காகப் பிடித்தம் செய்த தொகையை 17 ஆண்டுகளாக தனது கைவசமே வைத்துள்ள தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பேசுவது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும். ராஜஸ்தான் மாநில அரசு PFRDAல் செலுத்திய நிதியை தன்வசம் கேட்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அந்நிதி ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் தான் உள்ளது. எனவே, யாரிடமும் நிதியைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதில் சட்டச்சிக்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.*

*🛡️ஒருவேளை நிதியமைச்சர் அவர்கள் கூறியதைப் போல சட்டச்சிக்கல் ஏற்பட்டாலும் எத்தனையோ சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களுக்காக அதற்கான திருத்தத்தை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். தான் பதவியேற்றது முதல் அரசு ஊழியர்களுக்கு எதிரான கருத்துக்களை பல இடங்களில் பலமுறை வெளிப்படுத்தியுள்ள நிதியமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள இக்கருத்து எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் 75% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்பதே உண்மையாகும். ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏற்கனவே பெற்று வந்த உரிமைகள் தான் பறிக்கப்பட்டுள்ளன.*

*🛡️இந்தியா முழுவதும் பல மாநில அரசுகள் தனது ஊழியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் தமிழக நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.*

*🛡️ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை செலவு கணக்காகப் பார்க்கும் நிதியமைச்சர் அவர்கள், அவற்றை மக்கள் நலப் பணிகளுக்கான செலவாகப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பொருளாதார நிபுணரான நிதியமைச்சர் அவர்கள் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்" என்று வாக்குறுதி அளித்த போதே "இது நடைமுறைச் சாத்தியமற்றது" என்று அப்போதே ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் தற்போது எழுந்துள்ளது.*

*🛡️தமிழ்நாடு நிதியமைச்சரின் கருத்தினால் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் முதலமைச்சர் அவர்கள் உரிய விளக்கத்தை அளித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) வட்டாரத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது.*