Tuesday, 27 February 2018

*இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி -களையப்பட வழி என்ன?*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_70.html



 தோழர்.செ. நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


     

🌟 கவிஞர் ’சிற்பி’ எழுதிய ‘சர்ப்பயாகம்’ கவிதையில் சித்தரித்துள்ளது போல, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திலேயே அரசால் இழைக்கப்படும் அநீதியால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுப் பேரிழப்புக்கு உள்ளாகி வருபவர்கள் இடைநிலை ஆசிரியர்களே. அதிலும் குறிப்பாக 1.1.2006க்குப்பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படும் வரலாறு 1960 முதல் ஒவ்வொரு ஊதியக்குழுவையும் தொடர்ந்து அமைக்கப்பட்ட அலுவலர்குழுவால் ’பரமபத சோபான’விளையாட்டாகத் தொடர்கதை யாகிவருகிறது

🌟 1.11.1957 முதல் 31.5.1960 வரை இடைநிலை ஆசிரியர்களும், இளநிலை எழுத்தர்களும் பெற்றுவந்த ஊதியவிகிதம் 45-4-60-2-90 ஆகும். இளநிலை எழுத்தர்களாக நியமனம்பெற அன்றைய பள்ளியிறுதியான 11ஆம் வகுப்பு என்ற பொதுக்கல்வித் தகுதி வேண்டும். ஆனால், இடை நிலை ஆசிரியராக வேண்டுமானால் 11ஆம் வகுப்பு என்ற பொதுக்கல்வித் தகுதியோடு (தற்போது +2) இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புக் கல்வித்தகுதியும் கட்டாயம் தேவை. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகள் ஆசிரியர்பயிற்சி என்ற சிறப்புத் தொழிற்கல்வித்தகுதிக்கு ஊதிய நிர்ணயத்தில் எந்த மதிப்பும் தரப்படவில்லை.

*முதல் ஊதியக்குழு*

🌟 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலித்துப் புதியஊதிய விகிதங்களைப் பரிந்துரைக்க தமிழ்நாட்டில்  முதல் ஊதியக் குழு 1959ல்  நியமிக்கப்பட்டபோது  முதல் ஊதியக்குழுவின்முன் ஆசிரியர் கூட்டணியின் நிறுவனத் தலைவர் மாஸ்டர்.வா.இராமுண்ணி ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புக் கல்வித் தகுதியைக் கணக்கில்கொண்டு உயர் ஊதிய விகிதம் அளிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நியாயங் களை முதல் ஊதியக்குழு ஏற்றுக்கொண்டது. ‘It has been generally conceded that the present scales of pay of teachers are low in relation to their responsibilities and that the profession is not attracting the best talents in the country. It has been urged before us that, it is only those who fail to secure suitable employment elsewhere that turn to teaching and that the present state of affairs cannot be remedied unless the present scales of pay of teachers are stepped up appreciably. We feel that the present grievances of teachers are genuine and that their emoluments should be considerably raised to secure the necessary improvement in standards of instruction in our school at all levels with in sources available.’(Page 94, Chapter 20, Para 13)

  We therefore recommended a revised scale of pay.


🌟 ஆனாலும்’தமிழ் நாட்டின் நிதி நிலைகருதி தற்போது உயர் ஊதியவிகிதம் அளிக்க இயலவில்லை: இதை அடுத்த ஊதியக்குழு பரிசீலிக்க வேண்டும்’ என்ற பரிந்துரையை அளித்தது.

🌟 இடைநிலை ஆசிரியர்களுக்கும், இளநிலை எழுத்தர்களுக்கும் 90-4-110-3-140 என்ற ஊதியவிகிதங்களை 1.6.1960 முதல் நடைமுறைப் படுத்தியது. பணியில் சேரும்போது ஆண்டு ஊதிய உயர்வு ரூ.4/ ஆகவும், அனுபவமும் திறமையும் பெற்றபிறகு ஆண்டு ஊதிய உயர்வு ரூ.3/ஆகக் குறையும் விந்தை இங்கும் தொடர்ந்தது.

*இரண்டாம்ஊதியக்குழு*

🌟 1969ல் நியமிக்கப்பட்டு 2,10.1970ல் நடைமுறைக்குவந்த இரண்டாம் ஊதியக்குழுவின்முன் மாஸ்டர் வா.இராமுண்ணி முதல் ஊதியக்குழு ஆசிரியர்களுக்கு உயர் ஊதியவிகிதத்தை அளிக்கவேண்டும் என்று 1960ல் பரிந்துரைத்ததை எடுத்துக்காட்டி ஆசிரியர்களுக்கு உயர் ஊதியவிகிதம் அளிக்குமாறு வலியுறுத்தினார். 

🌟 ‘ஒரே பள்ளியில் படித்த இருவர்  பள்ளியிறுதியான 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் ஒருவர் 1960ல் உருவான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்நிலைஎழுத்தராக (Lower Division Clerk) (தற்போதைய இளநிலை எழுத்தர்-Junior Grade Assistant) 90-4-110-3-140 ஊதியவிகிதத்தில் பணியில் சேர்கிறார். மற்றவரோ, கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்: நாட்டின் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு ஆசிரியராக வேண்டு மானால், இரண்டு ஆண்டுகள்  ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆதாரப்பயிற்சி யில் கற்பித்தல்முறைகள், குழந்தைஉளவியல் ஆகியவற்றில் தேர்ச்சி என்ற சிறப்புத்தொழிற்கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். 1960-62ல் ஆசிரியர்பயிற்சிபெற்றுத்தேறி, 1962ல் ஆசிரியராக நியமனம் பெறும்போது அவருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.90/ அளிக்கப் படுகிறது. ஆனால் அப்போது ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தராக உள்ள அவரது நண்பரோ இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுகளைப் பெற்று அடிப்படை ஊதியமாக ரூ.98/ பெற்றுக்கொண்டிருப்பார்.

🌟 ‘ஆசிரியர் பணி அறப்பணி: அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற உயரிய நோக்கத்தோடு இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புத் தொழிற்கல்வித்தகுதி பெற்றுவந்தவர், அத்தகைய பயிற்சி எதுவும்பெறாத தனது நண்பரைவிட ரூ.8/ குறைவான ஊதியம் பெறுவார்! ஆசிரியர் பயிற்சி என்ற சிறப்புத்தொழிற்கல்வித்தகுதி தண்டனை ஆகலாமா?’ என மாஸ்டர் இராமுண்ணி சித்தரித்துக் காட்டியது இரண்டாம்ஊதியக்குழுவை அசைய வைத்தது. இளநிலை எழுத்தர்களுக்கு 200-5-245-10-325 எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 210-5-245-10-325 எனவும் நிர்ணயம் செய்து அறிவித்து நடைமுறைப் படுத்தியது


*ஒரு நபர்குழு*


🌟 ஆனால் ஊதியக்குறைகளை நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர்குழுவால்   இளநிலை எழுத்தருக்கும் 210-325 என ஊதியம் சமமாக்கப்பட்டது.   ஆசிரியர்பயிற்சி என்ற கூடுதல் தொழிற்கல்வித் தகுதி புறக்கணிக்கப் பட்டது. இடைநிலைஆசிரியர்களுக்கு மீண்டும்  அநீதி இழைக்கப்பட்டது.

*மூன்றாம்ஊதியக்குழு*

🌟 முதல் ஊதியக்குழு விலைவாசிப்புள்ளி 100ஐ அடிப்படையாகக்கொண்டும், இரண்டாம்ஊதியக்குழு விலைவாசிப்புள்ளி 200ஐ அடிப்படையாகக் கொண்டும் அமைந்தன. 1978ல் 320 விலைவாசிப்புள்ளியைக்கொண்டு மூன்றாம் ஊதியக்குழுஅமைக்கப்பட்டது.1970முதல் 1978 வரையான காலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்திய காலமாகும். 8 புள்ளி விலைவாசி உயர்ந்தால் ஒருதவணை அகவிலைப்படி அளிப்பது மத்திய, மாநிலஅரசுகள் ஏற்று நடைமுறைப்படுத்திய அகவிலைப்படி கொள்கை.  1970 முதல் 1978வரை உயர்ந்த விலைவாசிப்புள்ளிகள் 120. ஆகும். இதன்படி மத்திய அரசு 15 தவணை அகவிலைப்படிகளை அளித்தது.  ஆனால் தமிழக அரசோ 7தவணை அகவிலைப்படிகளை மட்டுமே அதற்கும் உச்சவரம்பு விதித்து அளித்தது. இதனால் மூன்றாம் ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம்+7தவணை அகவிலைப்படி மட்டுமே சேர்க்கப்பட்டு வெறும் 5% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.  இதன்விளைவு என்னவானது?

🌟 மத்தியஅரசின் 8ஆவது நிதிக்குழு இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊதியங்களை ஆய்வுசெய்து ‘இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுபவர்கள் தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்ற அவலநிலையைச் சுட்டிக்காட்டியது. இவர்களுக்கு ‘அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கவேண்டுமானால் தற்போது பெற்றுவரும் ஊதியம் 25% உயர்த்தப்படவேண்டும். இதற்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு ஊதியத்துக்காக ரூ.501.34 கோடியும், அகவிலைப்படிக்கு ரூ.294.8 கோடியும் அளிக்கவேண்டும்’ என்று பரிந்துரைத்தது. (பார்க்க: இந்தியன் எக்ஸ்பிரஸ் 1984 செப்டம்பர் 3 :Finance panel provides 500 cr. For pay revision –TN Staff ‘the lowest paid’)

*தமிழக அரசின் நான்காவது ஊதியக்குழு*

🌟 தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கப்பட குறைந்தபட்சம் 25% ஊதியஉயர்வு அளிக்க மத்தியஅரசு நிதியளித்திருந்தபோதும் தமிழகஅரசோ நான்காவது ஊதியக்குழுமூலம் 1.10.1084 முதல் 7% ஊதிய உயர்வுமட்டுமே அளிப்பதாக 26,5,1985ல் அறிவித்தது: 18% உயர்வை வஞ்சித்தது. இந்த உண்மையை அறியாமல் பலஆசிரியர் மற்றும் அரசுஅலுவலர் சங்கங்கள்’வாரிக்கொடுத்த வள்ளலே வாழ்க’என்று அன்றைய முதல்வரை வாழ்த்தின.  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், அரசு ஊழியர் சங்கமும் மட்டுமே ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து,’ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வஞ்சிக்கப் பட்டுள்ளார்கள்’ எனஅறிவித்தன. இந்த அநீதியை எதிர்த்துப்போராட 1985ல்’ஜாக்டா’,’ஜேக்டி’அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. 1985 செப்டம்பர் 5 ஆசிரியர்தினத்தை துக்க நாளாக அறிவித்தன:ஆசிரியர்களை வஞ்சித்த அரசு ஆணை எண் 555ஐ எரிக்கும் போராட்டத்தை 1985 நவம்பர் 3ல் நடத்தின. அகில இந்திய சராசரி ஊதியம் அளிக்கவேண்டி15,000 பெண்ஆசிரியர்கள் உட்பட 65,000 பேர் சிறைசென்றனர். தீபாவளித் திரு நாளிலும் ஆசிரியர்கள் சிறைவைக்கப்பட்டார்கள்.

*மீண்டும் ஒரு நபர்குழு*

🌟 அகில இந்திய சராசரி ஊதியத்தை எவ்வாறு அளிப்பது என்பதற்காக ஒரு நபர் குழுவை அரசு நியமிக்கத்தது. ஆனால் இந்தக்குழுவோ‘ஜேக்டி’ யில் இணைந்திருந்த ஆசிரியர் சங்கங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில வெற்று சலுகைகளை மட்டுமே பரிந்துரைத்தது. 65,000 பேர் தீபாவளித் திருநாளிலும் சிறையிருந்தது அலட்சியப்படுத்தப்பட்டது. அகில இந்திய சராசரி ஊதியம் அளிக்கப்படாத அநீதி தொடர்ந்தது.

🌟 மத்திய அரசின் நான்காவது ஊதியக்குழு1.1.1986 முதல்   நடைமுறைக்கு வந்தது. அந்தக்குழு ”ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலித்துள்ள சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அளிக்கப் பட்டுள்ளன. அவை மத்திய அரசால் எந்த நேரத்திலும் நடைமுறைக் குக்கொண்டுவரப்படலாம் எனவே  நாங்கள் ஆசிரியர்களின் ஊதிய நிலை களை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த பழைய ஊதியங்களுக்கு புதிய ஊதியவிகிதங்களை மட்டுமே தந்துள்ளோம்’ என அறிவித்தது. அதன்படி மத்தியஅரசின் இடைநிலை ஆசிரியர் 1200-30—1560-40-2040 ஊதியவிகிதம் பெற்றனர். அப்போது தமிழ்நாட்டில் இடைநிலைஆசிரியர் ஊதியவிகிதம் 610-20-730-25-955-30-1075 தான்!

*ஜேக்டீ பேரமைப்பு*

🌟 ’இனி எங்களுக்குவேண்டியது ‘அகில இந்திய சராசரி ஊதியமல்ல: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தான்’ என ஜேக்டீ கோரிக்கையை மாற்றி  ஆசிரியர்களை மீண்டும் போராட்டகளத்துக்கு அணிதிரட்டியது. 1985ஜேக்டீ போராட்டத்தில் ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்ட அனுபவங்களை பரிசீலித்து, நியாயங்களை நிலை நாட்டி அரசை ஏற்க வைக்க அரசு ஊழியர்களும் இணைந்த ‘ஜேக்டீ பேரமைப்பை உருவாக்கியது.


*தமிழக அரசின் ஐந்தாம்ஊதியக்குழு*


 

🌟 1988ல் ‘ஜேக்டி அரசு ஊழியர் பேரமைப்பு உருவாகி ‘மத்திய அரசுக்கு இணையான ஊதியவிகிதம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது.. தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு வீழ்ந்தபின் ஆளுநர் ஆட்சியில் இறுதியாக 1988 ஜூன்22 முதல் ஜூலை 22வரை வேலை  நிறுத்தப்போராட்டமும், ஜூலை 22 அன்று ’சென்னைகோட்டை முற்றுகைப் போராட்டமும்’  வரலாறு காணாதவகையில் நடைபெற்றன.

.

🌟 ஆளுநர் அலெக்சாண்டர்அரசு ஜேக்டி பேரமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.’ ‘Government agree in principle that the demand for pay parity with Central Government employees and teachers and one month’s bonus   are to be considered by the elected Government on the basis of the recommendations of the Vth pay commission. Accordingly the Vth Pay Commission will be constituted to go in these matters along with other terms of reference.’  என்று ஒப்புக்கொண்டது. 

🌟 ஆளுநரின் ஆலோசகர்ஜி.விஇராமகிருஷ்ணா,தலைமைச்செயலாளர் எம்.ராஜேந்திரன், கல்வித் துறைச்செயலாளர் ஹெச்.பி.என்.ஷெட்டி, நிதித்துறைச் செயலாளர் ஏ.எம்.சுவாமிநாதன், நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர் இலட்சுமி பிரானேஷ் ஆகியோர் கையொப்பமிட்டு எழுத்துமூலமான ஒப்பந்தத்தை அளித்தனர். ஐந்தாம் ஊதியக்குழு நியமிக்கப்பட்டது. 1.6.1988 முதல் தமிழ் நாட்டில் மத்திய அரசு ஊதியம்   நடைமுறை உண்மையானது. பள்ளியிறுதி என்ற கல்வித்தகுதிக்கு 975-1500-ம், இடைநிலை ஆசிரியருக்கு 1200-2040ம் ஊதியவிகிதங்களாகின.இடைநிலைஆசிரியர்கள்    நீண்ட போராட்டத்துக் குப் பின் ஏற்றம்பெற்றார்கள.

🌟 நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில்

மத்திய அரசின்  நான்காம்ஊதியக்குழு


 

🌟 தமிழகஅரசு மத்திய அரசு ஊதியவிகிதங்களைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதை எழுத்துமூலமான ஒப்பந்தமாக ஏற்றுக்கொண் டுள்ளதால் இனிமேல் எதிர்காலத்திலும்  தமிழ் நாட்டில் மத்திய அரசின் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறையாகும் என நம்பிக்கை கொண்டிருந்த ஆசிரியர்களுக்குப் பேரிடியாக மத்தியஅரசு   நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் நியமித்த 5ஆம் ஊதியக்குழு அறிவிப்பு அமைந்தது. அந்தக்குழுவின் பரிந்துரை வரையறைகளில் (TERMS OF REFERENCE)ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரமே அளிக்கப்படவில்லை. எனவே ஊதியக்குழுவின் தலைவர் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்க மறுத்தார்.


🌟 இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான டிட்டோஜேக் மத்திய அரசுக்கு ‘ நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் குழுவுக்கு ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான தொலைநகல் (ஃபேக்ஸ்) செய்திகளை அனுப்பியது செ.நடேசன் தலைமையில் டிட்டோஜேக் தலைவர்கள் 1996 ஆகஸ்ட் 4 முதல் 10 முடிய புதுடெல்லியில்   ஒருவாரகாலம் தங்கி மத்திய அமைச்சர்களையும், (பிரதமர் தேவேகௌடா தமது தாயார் உடல் நிலைகாரணமாக கர்நாடகம் சென்றுவிட்டதால் சந்திக்க இயல வில்லை.பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது)  அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஏ.பி.வாஜ்பேயி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்துத்   தலைவர்களையும் சந்தித்தனர். டொராண்டோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுவிழாவுக்குச் சென்று திரும்பிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையை விமான நிலையத்திலேயே ஆகஸ்ட் 9 அன்று சந்தித்து ஊதியக்குழுவின் பரிந்துரை வரையறைகளில் ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் அளிக்கக்கேட்டுக் கொண்டார்கள். அமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை இரண்டு நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.   ஆகஸ்ட் 10 சனி அன்று நீதிபதி இரத்தினவேல் பாண்டியனை   அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் இரண்டு நாட்களில் வரவுள்ளதைத் தெரிவித்தனர். அவரிடம் மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழு ஆசிரியர்களின் ஊதிய நிலைகளைப் பரிசீலிக்காமல் பழைய ஊதியங்களுக்கு புதிய ஊதியத்தை மட்டுமே அளித்திருந்தததைச் சுட்டிக்காட்டினர். இடைநிலை ஆசிரியர்களுக்கு  மூன்றாம் ஊதியக்குழு வில் அளிக்கப்பட்ட 330-1600 என்ற பழைய ஊதியவிகிதத்துக்கு   1200-2040 அளிக்கப்பட்டது (இந்த விவரங்களைத் தமிழ் நாட்டு ஆசிரியர்களுக்கு விளக்கிட   சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரைகளைசெ. நடேசன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்) ஆனால் சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரையான 500- 3950 தொடர் ஊதியவிகிதத்தில் 500-25-700-30-1,000 என்ற இடை நிலை ஆசிரியர் ஊதியவிகிதத்துக்கு 1.1.1986முதல் 1640-2900 ஊதியவிகிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதைக்கணக்கில் கொண்டு 1640-2900க்கு புதிய ஊதியவிகிதமாக 1.1.1996முதல் 5500-8300 ஊதியவிகிதம் அளிக்கக் கேட்டுக்கொண்டார்கள். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்குழு இந்தவேண்டுகோளில் பாதியளவான 50%ஐ மட்டும் ஏற்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.1986 முதல் 1400-2600 ஊதியவிகிதம் அளிக்கப்பட்டதாகக்கருதி  1.1.1996 முதல் 4500-7,000 ஐ நிர்ணயித்தது.


*தமிழகஅரசின் ஆறாவது ஊதியக்குழு*

🌟 தமிழ்நாட்டில் முதல்முறையாக 1.6.1988 முதல் மத்திய அரசு ஊதியவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது’எள்ளளவும், எள்ளின்முனையளவும்கூட குறைவுபடாமல்  மத்திய ஊதியம் அளிக்கப்படும்’ என்று சட்டமன்றத்தில் 24.5.1989ல் நிதிநிலை அறிக்கையின்போது தெரிவித்தவர் அன்றைய முதல்வர்  மு.கருணாநிதி. ஆனால் அவரே மத்திய அரசின் ஐந்தாம் ஊதியக்குழு ஊதியவிகிதங்களைத் தமிழ்நாட்டில் ஆறாவது ஊதியக்குழு அமைத்து 1.6.1998 முதல் நடைமுறைப்படுத்தியபோது,’மத்திய அரசில் சில பிரிவினருக்கு கூடுதலாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே இங்கு அளித்தால் அரசு அலுவலாளர் ஏற்கமாட்டார்கள்’ என்று கூறி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியக்குழு அளித்த 4500-76000 ஊதியவிகிதத்தை 4,000-6,000 எனக் குறைத்து அறிவித்தார்! இந்த அறிவிப்பை டிட்டோஜேக் ஏற்கமறுத்தது ஜேக்டி-பேரமைப்பின் போராட்டத்தின்மூலம் பெற்ற மத்திய அரசு ஊதியவிகிதத்தைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என மாபெரும் பேரணியை 28.5.1999ல் சென்னையில் நடத்தியது. பேரணியின் முடிவில் டிட்டோஜேக் தலைவர்களை அழைத்துப்பேசிய முதல்வர் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500-7000 ஊதியவிகிதம் அளிக்கப்படும் என உறுதியளித்து ஆணை பிறப்பித்தார்.இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்படவிருந்த அநீதி தவிர்க்கப்பட்டது.

*மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு*

🌟 5,10,2006ல் மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை நியமித்தது. இக்குழுவின்முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ‘ஐந்தாம் ஊதியக்குழு வில் சட்டோபாத்யாயாகுழுவின் பரிந்துரைகள் 50% அளவுக்கே ஏற்கப் பட்டதைச் சுட்டிக்காட்டியது. 1.1.1996முதல் இடை நிலை ஆசிரியர்களுக்கு 6500-10500 ஊதியவிகிதம் வழங்கியதாகக் கருதி அதற்கேற்ப இடை நிலை ஆசிரியர்களின் புதிய ஊதியவிகிதத்தை நிர்ணயிக்கக் கேட்டுக்கொண்டது.

🌟 மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு இதனை ஏற்றுக்கொண்டது. ’In order to attract better teachers and to retain them in the government, the commission is inclined to recommend a higher start for primary teachers. This is along with the restructuring of the existing pay scales of teachers’ என்று அறிவித்து இடைநிலைஆசிரியர் ஊதியத்தை 6500-10500 என்ற பழைய ஊதியவிகிதத்துக்கு புதிய ஊதியமாக ஊதியக்கட்டு 2ல் வ.எண். 12ல்(PB 2 S.No. 12) உள்ள 9300-34,800 ஊதியவிகிதத் தையும் 4200 தர ஊதியத்தையும் (Grade Pay)நிர்ணயித்தது.(அடிப்படை ஊதியம் 9300+தர ஊதியம்4200=மொத்தம் ரூ13500)

*தமிழகஅரசின் ஏழாவது ஊதிய (அலுவலர்)குழு*

🌟 ஆனால் தமிழக அரசின் ஏழாவது ஊதிய அலுவலர்குழுவோ மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு இடை நிலை ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை 6500-10500 என உயர்த்திநிர்ணயித்ததைக் குறைத்து 4500-7000 என்ற பழைய ஊதியத்துக்கு  புதிய ஊதியமாக  ஊதியக்கட்டு 1ல்  வைத்து    5200-20200 ஊதியவிதத்தையும் ரூ.2800 தர ஊதியத்தையும் நிர்ணயித்தது மத்திய அரசு நிர்ணயித்த 9300-34,800 ஊதியவிகிதத்தையும் 4200 தர ஊதியத்தையும் குறைத்து. 1.1.2006க்குப்பின் நியமனம்பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் அரசு ஆணை எண்.234 நிதி (ஊதியக்குழு) நாள்:1.6.2009ன் படி அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 = ஆகமொத்தம்ரூ8000 மட்டுமே நிர்ணயம் பெற்றார்கள். இவர்கள் ஏற்கனவே பழைய ஊதியவிகிதத்தில் ரூ.8370/ பெற்றுவந்தவர்கள்! இவர்கள் பழைய ஊதியத்தில் அதிகம்பெற்ற ரூ.370/ தனி ஊதியமாக (Personal Pay)வைக்கப்பட்டு அடுத்துவரும் ஆண்டு ஊதிய உயர்வுகளில் கழித்துக்கொள்ளப்படும் என்ற விநோதமும் அரங்கேறியது. மத்திய அரசு நிர்ணயித்த ரூ.13,500’க்குப்பதிலாக தமிழ் நாட்டில் ரூ8,000/ மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,500/ ம் அதற்குரிய அகவிலைப்படி இழப்பும் இடை நிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டது.


*மீண்டும் அலுவலர்குழு*

🌟 இந்த மாபெரும் அநீதி அரசுக்குச்சுட்டிக்காட்டப் பட்டபோது இந்தக் குறைபாட்டைக் களைய அலுவலர்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவோ’மத்திய அரசில் இடை நிலை ஆசிரியர்கள் +2 பொதுக்கல்வித் தகுதியும், ஆசிரியர் பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.   ஆனால் தமிழ் நாட்டில் இடை நிலை ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு பொதுக்கல்வித்தகுதிபெற்று ஆசிரியர் பயிற்சிபெற்றவர்கள்’ என்ற பொய்யான தகவலை அரசுக்குத் தந்தது. ஆகவே அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 அளித்தது சரிதான் என மாபெரும் அநீதியை நியாயாப்படுத்தியது.  எனவே ரூ.750/ மட்டும் தனி ஊதியமாக கருணையோடு அறிவிக்கப்பட்டது! தமிழ் நாட்டில் இடை நிலை ஆசிரியர்கள் +2 பொதுக்கல்வித்தகுதியுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மைநிலையைக் குழிதோண்டிப் புதைத்து இடைநிலை ஆசிரியர்களின் இந்த இழப்பு வாழ்நாள் முழுதும் தொடரும் இழப்பாவதற்கான அடித்தளத்தை இந்த அலுவலர்குழு உருவாக்கிவிட்டது.


🌟 மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவும்

தமிழக அரசின் எட்டாவது ஊதிய அலுவலர்குழுவும்


மத்தியஅரசு தனது ஏழாவது ஊதியக்குழுவில்  இடைநிலை ஆசிரியர் களுக்கு பழைய ஊதியவிகிதமான 9300-34,800 + 4200 தர ஊதியத்துக்கு   35,400-1,12,400 ஊதியவிகிதம் என மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தியது.

ஆனால் தமிழக அரசு நியமித்த எட்டாவது ஊதிய அலுவலர்குழுவோ ஏழாவது ஊதியக்குழுவில் அ நியாயமாகக் குறைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் 5200+தரஊதியம்2800 ஐக் கணக்கில்கொண்டு 1.1.2016 முதல்  20,000-65,000 ஊதியவிகித்த்தையே அரசு ஆணை எண் 303 நிதி(ஊதியக்குழு) துறை நாள்: 11 அக்டோபர் 2017 மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.இதனால இனிவரும் ஆண்டுகளில் மாதம் ஒன்றுக்கு இடை நிலை ஆசிரியர்களுக்கு 15.500ம் அதற்கு உருய அகவிலைப்படியும்  இழப்பாக, பேரிடியாக அமைய உள்ளன.


🌟 இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி எவ்வாறு அரங்கேறியுள்ளது? இதோ கவிஞர் சிற்பியின்  கவிதை:

⚡சர்ப்பயாகம்

பரம பதத்துச்சோபான படம் எங்கள் தேசம் அதில்

கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக்கிடக்கின்றன.


⚡ஆதிசேஷன் கார்க்கோடகன் கண்ணாடிவிரியன்

கொம்பேறிமூர்க்கன் படங்கள் விரித்து

உடல்கள் நெளித்து காத்துக்கிடக்கின்றன.


⚡தாயங்கள் போட்டுநாங்கள் தொடங்கும்

ஒவ்வொருபயணத்தையும்

தடுத்துக் கடிக்க அடுத்துக் கெடுக்க

இத்தனை நாகங்களா?


⚡புறப்பட்ட திசைக்கேவிரட்டியடிக்கும்

இருட்டுத் தாரைகளே!பரமபதத்தின்

தடத்தை மறைக்கும் திருட்டுச் சாரைகளே!


⚡வழிவிடச் சொல்லிவிரல்கள் நடுங்கத் தாயம் உருட்டுகிறோம்..

உங்கள் வாயில்விழுந்து வாலில்வழிந்து ‘நேற்றை’ப் புரட்டுகிறோம்!


⚡எங்கோ சிலசில ஏணிகள்-அவற்றில்ஏறி நிமிர்ந்தவுடன்

சீறிய உங்கள் விஷ நாக்குகளின் ஈரத்தில் வழுக்குகிறோம்.!


🌟தமிழ் நாட்டில் அலுவலர்குழு என்னும் நச்சரவங்களால் இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையாப்பட  1.6.2006 முதல் அவர்களுக்கு 9300-34,800 ஊதியவிகிதத்தையும் 4200 தர ஊதியத்தையும் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தி 1.1.2016 முதல் பழைய ஊதியவிகித மான 9300-34,800 + 4200 தர ஊதியத்துக்கு1.1.2016 முதல்   35,400-1,12,400 ஊதியவிகிதம் என மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

*இதற்குவழி?*

*🌟இதோ கவிஞர் சிற்பி கவிதையின் முடிவுப்பகுதி:*

⚡நடுங்கி நடுங்கித் தாயக்கட்டைகள்உருட்டிக் காத்திருந்தால்

பரம பதத்தை ஒரு நாளும் நீர் அடைந்திட விடமாட்டீர்.


அதனால் நாகங்கள் அழிக்கும்யாகங்கள் தொடங்கினோம்கொடிய சர்ப்பயாகம்!

எமது சர்ப்ப யாகத்தில்சிறியது-குறியதுபெரியது- நெடியது

பூ நாகம் முதல் பொறி நாகம் வரைஅரியும்-எரிய்டும்கரியும்-கரியும்!

அந்த

எரிதழற் சாம்பலில்ஒருபரம பதத்தைஎங்கள் சிரம பதத்தால்

சிருஷ்டித்துக் கொடுப்போம்.ஏனெனில் இது‘ஜனமே ஜய’யுகம்!


*வேண்டுகோள்*

🌟 ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடக்கூடாது: அதுவும் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என நல்ல உள்ளம் கொண்டவர்களும், மாண்புமிகுநீதியரசர்களும் அறிவுரை வழங்கியுள்ளார் கள். அந்த அறிவுரைகளை  வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் ’தமிழக அரசு ‘Government agree in principle that the demand for pay parity with Central Government employees and teachers என ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும்  எழுத்துமூலம் அளித்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வைப்பதும்  இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வாழ் நாள் முழுதும் தொடரும் அநீதியை களைவதும்  அவர்களது தார்மீகக் கடமை அல்லவா?

இந்தத் தார்மீகக் கடமை நிறைவேற்றப்படாவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் நியாயங்களுக்காக *அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ‘சர்ப்ப யாகங்களை’ மேற்கொள்வதைத்தவிர வேறு என்னசெய்ய?*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: