*TNPTF - நவம்பர்-26 மாவட்டத் தலைநகர் அரசாணை எரிப்புப்போர்-அழைப்பிதழ் மாதிரி மற்றும் பங்கேற்பாளர்கள் பட்டியல் (வட்டார அளவிலான பட்டியல்) மாதிரி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf-26.html
*_பேரன்புமிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்._*
*_“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?”_ என்று பாடிய மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக, தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அக்கினிக் குஞ்சாய் ஆர்த்தெழும் நாள்தான் 2018 நவம்பர் 26.*
*⭐அன்று இந்த அக்கினிக்குஞ்சு பற்றவைக்கும் “அரசாணை எரிப்பு” என்ற போராட்ட நெருப்பு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டெரிக்கும்.*
*⭐இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்கான இக்களப்போரில் நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைக்க தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாஞ்சையோடு அழைக்கிறது.*
*⭐44 ஆண்டுகால மிகக் கடுமையான களப் போராட்டங்களின் மூலம் நம் முன்னோர்கள் அடிபட்டு, மிதிபட்டு, உதைபட்டு, வதைபட்டு , கண்ணீரும் செந்நீரும் சிந்தி, பல இன்னுயிர்களை ஈந்து பெற்றுத் தந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் அரசாணை எண் : 234 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் : 01.06.2009 இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறித்துக்கொண்டது. மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் (PB-2) 9300 - 34800 + 4200 PB என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசோ இடைநிலை ஆசிரியர்களுக்கு (PB1) 5200 - 20200 + 2800 PB என நிர்ணயித்து 01.01.2006முதல் அடிப்படை ஊதியத்திலேயே ரூ 5500-ஐ பறித்துக் கொண்டது.*
*⭐அடுத்து வந்த தமிழக அரசின் எட்டாவது ஊதியக்குழுவின் அரசாணை எண் : 303 நிதி ( ஊதியப்பிரிவு) துறை நாள் : 11.10.2017, மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 35400 என நிர்ணயித்திருக்க, தமிழக அரசிலோ இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20600 - என நிர்ணயித்து அடிப்படை ஊதியத்திலேயே ரூ 14800 ஐ பறித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.*
*⭐இந்த அநீதியை எதிர்த்து முதன்முதலில் போராட்டக்களம் கண்ட இயக்கமும், இன்றுவரை பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான களப் போரைச் சமரசமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கமும், எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இயக்கமும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதான்.*
*⭐இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக இன்றுவரை தனிச்சங்க நடவடிக்கையாக மட்டும் 28 களப்போராட்டங்களை நடத்தியுள்ள ஒரே இயக்கம் _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_ மட்டுமே.*
*⭐நம்முடைய போராட்டங்களின் விளைவாக ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக தமிழகஅரசு அமைந்த பல்வேறு குழுக்கள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புப் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தின.*
*⭐தமிழக அரசின் 7 வது ஊதிய மாற்றக்குழுவின் தலைவரான _திருமதி.மாலதி, IAS_ அவர்கள் “இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதால் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர முடியாது” என்று வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார்.*
*⭐ _திரு.கிருஷ்ணன், IAS_ அவர்கள் தலைமையிலான மூவர் குழுவோ “ இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புக் கல்வித்தகுதி கொண்டவர்கள்.*
*⭐எனவே, அவர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது” என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து முற்றிலும் தவறான தகவலைக் கூறி இடைநிலை ஆசிரியர்களைக் கேலி செய்தது.*
*⭐ _திரு.ராஜீவ் ரஞ்சன், IAS_ அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழுவோ “இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்கள். கிராமங்களில் விலைவாசி மிகவும் குறைவு.*
*⭐எனவே, அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தேவையில்லை” என்று பொது அறிவுக்கு ஒவ்வாத கருத்தைத் தெரிவித்து நம் நெஞ்சில் கோபக்கனலை ஏற்றியது.*
*⭐தற்போது 8 வது ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்டுள்ள திரு.சித்திக், IAS அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழுவோ காலநீட்டிப்பில் காலந்தள்ளிக் கொண்டிருக்கிறது.*
*⭐இன்றைய நிலையில் ஊதியத்தில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் , கடைநிலை ஊழியர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவிலேயே மிகக்குறைவான ஊதியம் பெறும் இழிநிலைக்கு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் கொண்டு செல்லப்பட்டு விட்டார்கள். ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கி தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது.*
*⭐இத்தகு இழிநிலை போக்கிட இதுவரை நாம் நடத்திய போராட்டங்கள் நமக்குத் தீர்வைத் தரவில்லை.*
*⭐எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைப் போக்கிட, பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்டிட எத்தகு தியாகத்திற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தயாராகிவிட்டது.*
*⭐மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்காக 1985 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டங்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் முதன்முறையாக தனிச்சங்க நடவடிக்கையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 2018 நவம்பர் 26 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைப் பறித்த அரசாணை எண் : 234 நிதி(ஊதியப் பிரிவு) துறை நாள் : 01.06.2009 மற்றும் அரசாணை எண் : 303 நிதி (ஊதியப்பிரிவு) துறை நாள் : 11.10.2017 ஆகியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தவுள்ளது.*
*“சாக்காடே நம்மைத் தொடர்ந்து வந்தாலும் சர்க்காரே நம்மைத் தூக்கி எறிந்தாலும் ஆக்கமெலாம் நாம் இழந்து தவித்தாலும் அடுக்கடுக்காய் துயர்கள் நம்மை வதைத்தாலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்கான இக்களப்போரில் எத்தகு இடர்வரினும் எதிர்கொள்வோம்!*
*சிறைச்சாலைகளையும் தவச்சாலைகளாக எண்ணுவோம்!*
*நவம்பர் - 26 அரசாணை எரிப்புப்போரில் எழுச்சியுடன் பங்கேற்போம்!*
*இது சங்கம் வளர்ப்பதற்கான போராட்டமல்ல;*
*அங்கம் கொடுத்தேனும் உரிமையை மீட்பதற்கான போராட்டம்!*
*ஆசிரியப் பேரினமே ! அநீதி களைய ஆர்ப்பரித்து வாரீர்!*
*“ஒருவனின் காலடியில் மண்டியிட்டு உயிர்வாழ்வதை விட
எழுந்து நின்று போராடி
உயிரை விடுவது எவ்வளவோ மேல்”*
*- சேகுவேரா*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment