✍️CPS pension scheme அதனை ஆரம்பம் முதலே அரசு ஊழியர்களால் ஏன் எதிர்க்கப்படுகிறது ஒரு பார்வை...!
✍️கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அளவில் பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டுமென நெட்டிசன்கள் ``#WeWantOldPension'' என்பதை ட்ரெண்ட் செய்து கவனம் ஈர்த்தனர். 'பென்' னும் 'சன்'னும் கைவிட்டால் பென்சன்தான் காப்பாற்றும் என்பது அனுபவமொழி. கால் காசு ஆனாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும் என்பதற்கு காரணமாய் சொல்லப்பட்டது ஓய்வூதியம் கிடைக்கும் நம்பிக்கையில் தான். ஆனால் இந்தியாவில் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த யாவருக்கும் பழைய ஓய்வூதியம் என்பது கிடையாது. அதற்கு பதில் புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதனை ஆரம்பம் முதலே அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்.
✍️பல்வேறு கட்டப் போராட்டங்களின் பிரதான வடிவமாய் பார்க்கப்பட்டது பழைய ஓய்வூதியத் திட்டமாகும். பொதுமக்களின் பார்வையில் இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என கடந்து செல்வதும்.. ஊழியர்களோ நாங்கள் கட்டிய பணத்தை எங்களுக்கு கொடுப்பதில் என்ன சுணக்கம் என கேட்டும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
#ஓய்வூதியம்
✍️ஆங்கிலேயர் ஆட்சியில் 1857ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தம் நாட்டில் வழங்குவது போலவே இந்தியர்களுக்கும் வழங்க 1871ம் ஆண்டு இந்திய ஓய்வூதியச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அப்போதைய உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ஓய்வுக்குப் பின் நிலமாக, பணமாக பென்சன் வழங்கியது. பின்னர் இந்திய சுதந்திரத்துக்குப் பின் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை அரசின் பொதுக்கணக்கில் வைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு.. ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையில் இருந்து பென்சன் வழங்கி வந்தது.
✍️இவ்வாறு நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்ய அப்போதைய பா ஜ க அரசு ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைக்க முடிவெடுத்து 2002ல் மூன்று குழுக்களை அமைத்தது. அதில் பட்டாச்சார்யா குழுவின் கருத்துப்படி வரையறுக்கப்பட்ட பயனளிப்புத் திட்டம் என்பதை வரையறுப்பு பங்களிப்புத் திட்டமாகவும், ஓய்வூதியத்தை அரசு மற்றும் பொதுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஓய்வூதியம் வழங்க பரிந்துரைத்தது.
✍️அதனைத் தொடர்ந்து 2002-03ம் பட்ஜெட்டில் 2003 அக்டோபர் முதல் பணியில் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைத்தப்படும் என அறிவித்தது. பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் படைப்பிரிவினர், நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இடதுசாரிகள் மட்டும் இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா 'இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்' என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததினால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப்படுத்தியது.
19.09.2013ல் அரசிதழில் வெளியிட்டு சட்டம் அமலானது.
#புதிய ஓய்வூதியம்
✍️மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்தின. இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்குவங்கம், திரிபுரா, கேரளாவில் நடைமுறைப் படுத்தவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்றன.
✍️தமிழகத்தில் 1-4-2003க்கு பிறகு பணியேற்றவர்க்கு பழைய ஓய்வூதியம் கிடையாது. புதிய ஓய்வூதியத்தில் பழைய ஓய்வூதியம் போல் பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத்தை மொத்தமாக தொகுத்துப் பெறுதல் (commutation) போன்றவை கிடையாது. இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஒய்வூதியம், குறைந்த பட்ச ஓய்வூதியம்,வருங்கால வைப்பு நிதி, முன்பணம் கடனாய்ப் பெறுதல், விலைவாசி உயரும்போது அகவிலைப்படி உயர்வு, குடும்பப் பாதுகாப்பு நிதி போன்ற எந்தச் சலுகையும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை.
✍️புதிய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (pension fund of regulatory and development authority-PFRDA)எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
#தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)
✍️1.1.2004 ல் மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டு பின் மக்களுக்கும் 1.5.2009ல் விரிவுபடுத்தப்பட்டது.சி.ஆர்.ஏ எனும் சென்ரல் ரெக்கார்ட் ஏஜென்சி மூலம் முறைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் PRA எனும் permanent Retirement Account number வழங்கப்படும்.இதில் Tier I,Tier II என இருவகை ஆப்சன் உள்ளது. முதலாவது முதிர்வுகாலம் 60வயது முடியும் வரை எடுக்க முடியாது.
✍️இரண்டாவது ஒன்று முதிர்வு காலம் முன்பே அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். Tier I ல் மருத்துவ மற்றும் சில காரணங்களுக்காக ஐந்து வருட இடைவெளியில் 10%, 10%,5% என மூன்று முறை கடன் எடுத்துக் கொள்ளலாம்.வருவான வரியில் Tier I மட்டும் காண்பித்துக் கொள்ளலாம்.
✍️ஓய்வூதிய தொகையில் மூன்று வழிகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.Equity (High risk,High returning)Corporate (medium risk,medium returning)government schemes (Low risk,Low returning). விருப்பப்படி இதில் முதலீடு செய்யலாம்.அதேபோல் Active choice, Auto Choice என இருவகை உள்ளது.அதிலும் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.பழைய ஓய்வூதிய திட்டம் போல் பணம் கடன் எடுக்க முடியாது.சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.எந்த வித பணப்பலனும் இல்லையாதலால் மத்திய அரசின் பங்களிப்பாக 10% கொடுத்ததை 4% உயர்த்தி தற்போது 14% கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#ஓய்வூதிய பிடித்தம்
✍️நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% மிகாமல் தொகைப் பிடித்தம் செய்யப்படும்.அதற்கு இணையாக 10% தொகையை அரசு செலுத்தும். உதாரணத்திற்கு அடிப்படை ஊதியம்+அகவிலைப்படி ரூ 25000 ஊதியத்தில் பத்து சதவீதமான ரூ2500 ஊழியரின் பங்களிப்பும், அரசின் பங்களிப்பாக ரூ2500 மொத்த ரூ5000.அதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி விகிதம் அறிவிக்க்ப்படும்.தற்போதைய காலாண்டு வட்டிவீதம் 7.1% ஆகும்.ஒவ்வொரு நிதியாண்டிலும் வருடாந்திர தொகைக்காக கணக்குச் சீட்டு வெளியிடப்படும்.இதில் விடுபட்ட தொகை இருப்பின் அதை உடனடியாக தங்கள் சம்பளம் வழஙகும் அலுவலரிடம் குறிப்பிட்டு missing credit சரி செய்ய வேண்டும்
✍️பணிக்காலத்தில் ஒருவர் ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ அரசாணை எண் 59 (22.2.2016)ன் படி Annexure 1 படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் உடனடியாய் உரிய தொகையை வழங்கிட செய்கிறது.தங்கள் இருப்பில் உள்ள தொகையில் 60% உரியவரிடமும் 40% தொகையை நிரந்தர வைப்பாக வைத்து அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.விருப்ப ஓய்வு பெற்றால் 80% தொகை ஓய்வூதிய முதலீட்டுத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு 20% ஊழியரின் கைகளில் வழங்கப்படும். மொத்தத் தொகைக்கும் வருமான வரிவிதிப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.முதலீடு செய்த தொகைக்கு,சந்தை நிலவரப்படி கிடைக்கும் தொகை மாதாந்திர பென்சனாக வழங்கப்படும்.
#ஓய்வூதியம் இல்லை
✍️தற்போது ஓய்வு பெறும் ஊழியர் தன் பங்கேற்பு ஓய்வூதியத்தின் இறுதிக் கணக்கு சீட்டின் நகலுடன் சென்னைக்கு தம் துறை ரீதியாக விண்ணப்பிக்க வேண்டும்.CPS எனப்படும் contributory pension scheme மாதாந்திர தொகையில் ஏதேனும் விடுபட்டிருந்தால் மாவட்ட டேட்டா சென்டரை அணுகி..எந்த மாதத்தில் விடுபட்டது என தேதி,மாதம்,Voucher number வாரியாக குறித்துக் கொண்டு சென்னை அலுவககத்துக்கு அனுப்ப வேண்டும்.அரசாணை 59ல் உள்ள Annexure I ஐ பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.தற்போது 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவர் தான் கட்டிய தொகையையும் அரசின் பங்கீட்டுத் தொகையையும் அதற்கான வட்டியுடன் வழங்கி ஓய்வூதியம் கோரக் கூடாது என்ற நிபந்தனையுடன் முழுத் தொகையும் வழங்கிவிட்டனர்.தன் கடனை எல்லாம் அடைத்து ஓய்வூதியம் இன்றி இப்போது அவர் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
✍️CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்சிடம் கேட்டபோது இதுவரை 18000 பேர் ஓய்வு பெற்றும் அதில் சிலர் இறந்தும் உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் பென்சன் இல்லை.வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வூதியம் இன்றி ஒரு அச்சத்துடனேயே வாழ்வை நடத்த வேண்டியுள்ளது என்றார்.
✍️பங்குச்சந்தையில் போடப்படும் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.PFRDA பொறுப்பு ஏற்காது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் 10 சதவீத தொகையை அளிக்கும் அவசியம் எழாது.ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும் என பல்வேறு யோசனைகள் சொல்லப்படுகிறது. பென்சன் இருந்ததால் பணிக்காலத்தில் தவறு செய்தால் பென்சன் கிடைக்காமல் போய்விடும் எனும் அச்சம் ஊழியர்க்கு இருந்தது.பணி பாதுகாப்பும்,நமக்கு பிறகு மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும் எனும் தைரியம் இருக்கும்.ஆனால் தற்போது அது இல்லை.
✍️ஒவ்வொரு தேர்தலின் போதும் சி.பி எஸ் திட்டம் ஒழிக்கப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளனர். இம்முறை நிறைவேறும் என உறுதியாக நம்புகின்றனர் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள்.
Source
Vikatan
JULY 05, 2021