தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு
நாள்:27.08.2021
🛡️தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையிடமிருந்து ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய நான்கு அமைப்புகளுக்கும் நேற்று(26.08.2021) மாலை அழைப்பு விடுக்கப்பட்டது.
🛡️அதன்படி இன்று (27.08. 2021) நண்பகல் 12 மணியளவில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் 4 சங்கங்களின் தலைவர்களுடன் தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதிப்புமிகு.கிருஷ்ணன் இ.ஆ.ப, மனிதவள மேலாண்மை துறைச் செயலாளர் மதிப்புமிகு. மைதிலி K. ராஜேந்திரன், இ.ஆ.ப ஆகியோர் 90 நிமிடங்களுக்கும் மேலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதித்தனர். 4 சங்கங்களின் சார்பிலும் தலா ஒருவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் தோழர் ச.மயில் கலந்துகொண்டு ஆசிரியர் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த, கல்வி நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு
📌(1) பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
📌(2) இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
📌(3) ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 11% அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதிக்கப்பட வேண்டும்.
📌(4) ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
📌(5) ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர் கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி வழங்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் நிலுவையில் உள்ளது. பின்னேற்பு அனுமதி உடன் வழங்கிட வேண்டும்.
📌(6) ஒளிவுமறைவற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும்.
📌(7) ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல்களை ரத்து செய்திடவேண்டும்.
📌(8) தொடக்கக்கல்வித்துறை தனி அலகாகச் செயல்படவேண்டும்.
📌(9) தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொண்டு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.
📌(10) 13,500க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
📌(11) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி,அந்தியூர் ஒன்றியங்களில் மலைப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்படி வழங்கிட வேண்டும்.
📌(12) அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமன ஒப்புதலின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியமின்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்.
📌(13) மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தவேண்டும்.
📌(14) ஆசிரியர் நியமன வயது 40ஆகக் குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து,முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் ஆகியன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
🛡️4 சங்கங்களின் தலைவர்களும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.4 சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளையும் மிகுந்த கவனமுடன் பொறுமையாகக் கேட்டு, இடையிடையே விவாதித்து அது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும்,செயலாளர் அவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.இறுதியில் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன்,அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் இருவருடனான இச்சந்திப்பு சிறந்ததோர் நிகழ்வாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது.
🤝தோழமையுடன்
ச.மயில்
பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment