Monday 30 April 2018

*"தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டங்களும்" மாநிலப் பொதுச்செயலாளரின் விரிவான கட்டுரை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_30.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்புப் போராட்டங்களும்*



*🌟தமிழகம் முழுவதும் போராட்ட மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன, எத்திசை நோக்கினும் போர்க்குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன,  ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருமே போராட்டக்களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் வழக்கம்போல் அசைவற்ற நிலையிலேயே உள்ளது.*



*“போராட்டங்கள் யாராலே… புத்தி கெட்ட அரசாலே” என்ற முழக்கம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.*



*🌟தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற விவகாரத்தை ஒரு நிர்மலாதேவியே பின்னுக்குத் தள்ளிவிட்டார். இதுதான் வழக்கமான தமிழகத்தின் நிலை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் எளிதில் மறந்துவிடக்கூடியவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்.  தமிழக மக்களில் ஒரு பகுதியினராக உள்ள தமிழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினரும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதைத்தான் சமீபத்திய இடைநிலை ஆசிரியர் போராட்ட நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக கணக்கற்ற களப் போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பார்த்துக்கூட “என்ன செய்தது இந்த இயக்கம்?” என்று சிலர் கேள்வி கேட்கிற நிலையும், அன்றைக்குப் போராட்டம் நடத்துகிற இயக்கம் எதுவோ அதன் பின்னால் செல்வது என்பதும்கூட கோரிக்கையின் மீதான ஆழமான நியாயத்தை வெளிப்படுத்தினாலும் கூட, அக்கோரிக்கைக்காக எண்ணற்ற களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற இயக்கங்களை விமர்சிப்பது என்பது வேடிக்கையான ஒன்றாகவே உள்ளது.*



*🌟பொதுவாக, அநீதிக்கு எதிரான நியாயமான போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்த்தப்பட வேண்டியவை ஆதரிக்கப்பட வேண்டியவை என்பதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு இருவேறு கருத்துக்கள் கிடையாது. நியாயமான கோரிக்கைக்காக களத்தில் நிற்பது நேரெதிர்; கொள்கை கொண்ட அமைப்பாக இருந்தாலும் அக்கோரிக்கை வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துவதுதான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயல்பு. அவ்வகையில் நடந்து முடிந்த போராட்டத்தை நமது பேரியக்கம் வாழ்த்துகிறது. இருந்தாலும், இந்நேரத்தில் நம் இயக்கத்தின் நிலைப்பாட்டில் நமது உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், அவர்கள் முன் வைத்த சில விமர்சனங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக சில கள எதார்த்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.*



*🌟2016 ஆம் ஆண்டில் இதேபோன்று “உயிர் துறக்கும் போராட்டம்” என்ற பெயரில் போராட்டம் நடத்திய இதே நண்பர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து அப்போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அனைத்துக் களப்போராட்டங்களும் வெற்றியில்தான் முடியும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.*



*🌟அவ்வகையில் அது ஒன்றும் தவறில்லை ஆனால், அதன்பின்பு இப்பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வுகாண முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களிடம் வழக்குநிதி வசூலித்து ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே தனியே வழக்குப் போட்டதும்,  அவ்வழக்கில் ஒரு சில தினங்களில் தீர்ப்பு வந்துவிடும் என்று ஆசிரியர்களை நம்ப வைத்ததும், வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ள நிலையிலும், தாங்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்ததும், கூட்டுப்போராட்டத்தின் வலிமைக்கு பயன் தருமா? என்பதைத் தொடர்புடைய நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟இந்த இரட்டை நிலைப்பாட்டை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? போராட்டக்களத்தில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் “நீங்கள் தொடுத்த வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி அரசு செயல்படும்” என்று அரசுத் தரப்பு சொல்வதற்கு நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக ஆகிவிடாதா? என்பதையும் தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟ஜேக்டோ ஜியோவின் வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களால் நீதிமன்ற தலையீட்டால் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபோது இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் செய்வதை மறுத்து கடிதம் அளிக்குமாறு தவறாக வழிகாட்டியதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இடைநிலை ஆசிரியர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.*



*🌟“சமவேலைக்குச் சம ஊதியம்” பெறுகின்ற அரசாணையைப்; பெறுகின்றவரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று அறிவித்தவர்கள் நான்கு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு இம்மியளவும் இறங்கிவராத நிலையில் கல்வியமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.*



*🌟06.09.2017அன்று ஈரோட்டில் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து போராட்டக்களத்திலிருந்து வெளியேறிவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அத்தலைமையின் பின்னால் அணிவகுத்துச் சென்ற ஆசிரிய சகோதர, சகோதரிகள் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதும், அவர்கள் எந்த மனநிலையோடு போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.*



*🌟பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் கூட்டமைப்பான ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே, அதன் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியக் கோரிக்கையாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உறுதியான நிலைப்பாட்டிற்கு மாறானநிலை எடுத்து கூட்டமைப்பின் வலிமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதும், மே-8 முற்றுகைப் போரட்ட நிகழ்வை திசை திருப்பும் நோக்கில் செயல்படுவதும் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எதிர்கால நலன்களுக்கு உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தருணமிது.*



*🌟மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது சாதாரணமாகக் கிடைத்ததல்ல.  44 ஆண்டுகாலமாக பல்வேறு களப்போராட்டங்களின் பின்னணியில் அடிபட்டு, மிதிபட்டு, பல இன்னுயிர்களை இழந்து பெற்றதாகும். அவ்வாறு பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்கள் 1.6.1988 முதல் 31.12.2005 வரை மட்டுமே பெற முடிந்தது.  எனவே, இழந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைத் பெறுவது என்பதே சரியானதாக இருக்கும். ஆனால், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை விட்டுவிட்டு “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன் வைப்பது இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதையும், இதுபோன்ற நிலை எதிர்கால ஊதியக்குழுக்களில் மீண்டும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் நுணுகி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.*



*🌟மேலும், தொழிற்சங்க இலக்கணம் என்பது கூட்டுப்பேர சக்தியை அதிகரித்து அதன்மூலம் அதிகார வர்க்கத்திடமிருந்து நம் உரிமைகளை மீட்டெடுப்பது என்பதுதான்.  ஆனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கொண்ட ஜேக்டோ ஜியோவிலிருந்து விலகி நின்று ஜேக்டோ ஜியோவின் போராட்டம் உச்சநிலையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியத் கோரிக்கையாக உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதியத்திற்காக தனியே ஒரு போராட்டத்தை அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி “ ஒரு நபர் குழுவின் அறிக்கையின்படியே ஊதியம் வழங்கப்படும்” என்ற அரசின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்றது என்பது கூட ஜேக்டோ ஜியோவின் மே-8 முற்றுகைப் போராட்ட நிகழ்வில் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கைக்கு முன்கூட்டியே முடிவெழுதுகின்ற செயலாகவே கருதப்படும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.*



*🌟மேலும், போராட்டத்திற்குத் தலைமையேற்றவர்கள் தோழமை உணர்வோடு சகோதரச் சங்கங்களைக் கூட அழைக்காமல் போராட்டக்களத்தை தனிமனித பாராக்கிரமச் செயலாக நினைத்துக்கொண்டு செயல்படுவது என்பது விளம்பரத்திற்கும், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் வேண்டுமானால் பயன்படலாமேயொழிய கோரிக்கையை வென்றெடுக்க உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அக்கோரிக்கை வெற்றிபெறாத நிலையில், அதே கோரிக்கையைப் பிரதானமாகக் கொண்டு நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோவின் உச்சகட்டப் போராட்டமான மே-8 முற்றுகைப் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததும், 5,6 மாதங்களில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவிப்பதும் அரசுக்கு அவகாசம் கொடுக்கின்ற செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.*



*🌟இச்சூழலில் போர்க்குணமும், பொதுநலச்சிந்தனையும் கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடந்தகாலச் செயல்பாடுகளை, தன்னிகரற்ற போராட்ட நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது காலத்தின் தேவையாக உள்ளது.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி 02.08.1984ல் உருவான இயக்கம். உருவான மறுநாளே சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும், அதற்கு மறுநாள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணியையும் நடத்திய இயக்கம். எனவேதான் “உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம்” என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு பெயர் உண்டு.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொழிற்சங்க இலக்கணம் பொருந்திய இயக்கம்.  தனிமனித துதி இல்லாத இயக்கம்.  எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் போராடுகிற நெஞ்சுறுதியும், நேர்மைத்திறனும் கொண்ட இயக்கம்.  தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றிலே இதுவரை எந்த இயக்கமும் நடத்தியிராத களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற பேரியக்கம்.*



*🌟அதிகாரிகளிடமோ, ஆட்சியாளர்களிடமோ போராட்டக்களத்தில் அணுவளவும் சமரசம் செய்துகொள்ளாத பேரியக்கம். ஆசிரியர் நலனும், கல்வி நலனும் சமூக நலனுடன் இரண்டறக் கலந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம், வர்க்க சிந்தனையும், தர்க்க சிந்தனையும் கொண்ட சொர்க்க சிந்தனையற்ற தலைமையையும், உறுப்பினர்களையும் கொண்ட பேரியக்கம்.*



*🌟1985 நவம்பர் 3 ஜேக்டீ ஆணை எரிப்புப் போராட்டத்தில் முதலில் பங்கேற்று இறுதிவரை உறுதியுடன் களத்தில் நின்று போராடிய அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 



*🌟1988 வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல அமைப்புகள் இடையில் சேர்ந்து இடையில் காணமல் போன நிலையிலும், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருத்தி தெரிவித்து போராட்டத்தில் இருந்து விலகியதோடு அரசியல் ஆதாயத்திற்காக தொடர்ந்து போராடுகிறார்கள் என்று நம்மை விமர்ச்சித்த நிலையிலும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கிய 22.06.1988 முதல் இறுதி நாளான 22.07.1988 வரை களத்தில் நின்று சென்னை முற்றுகையின் முடிவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற ஆணை பெறும் வரை களத்தில் முன்னணிப் படையாய் நின்ற பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோன்றியபிறகுதான் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளும், சலுகைகளும் கிடைத்தன.*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்*


*⚡மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி*


*⚡தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்*


*⚡பாதிக்கப்பட்ட பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்*


*⚡வேலைவாய்ப்பக பதிவுமூப்பின்படி ஆசிரியர் நியமனம்*


*⚡ஒளிவு மறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு*


*⚡தொடக்கக்கல்விக்கென தனி இயக்குநரகம்*


*போன்றவை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகளாய் முன்னெடுக்கப்பட்டு கணக்கற்ற களப்போராட்டங்களின் இறுதியில் உறுதியுடன் பெறப்பட்டவை என்பதுதான் வரலாறு.*



*🌟நீதிக்கான போராட்டங்களுக்கு வீதிக்கு வந்தே விடைகாண முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம். களப்போராட்டங்களில் தனிச்சங்க நடவடிக்கைகளில் தன்னிகரற்ற தனிப்பெரும் இயக்கம். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிற கூட்டுப்போராட்டங்களை வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்த பேரியக்கம்.*



*🌟44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து அன்றுமுதல் இன்றுவரை தொய்வின்றித் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற இயக்கம்.*



*🌟25.03.2018-ல் “இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு” என்ற ஒற்றைக் கோரிக்கை மாநாடு நடத்திட மாநிலச் செயற்குழு முடிவெடுத்து முன்னெடுத்த நிலையில் ஜேக்டோ ஜியோவின் வேண்டுகோளை ஏற்றும், கூட்டுப் போராட்டத்தின் ஒற்றுமை கருதியும், அதன் வலிமை கருதியும் அம்முடிவைத் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிற இயக்கம்.*



*🌟தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜேக்டோ ஜியோ நிச்சயம் வென்றெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு உண்டு.*



*🌟அதை நோக்கிய களப்பயணம்தான் மே-8 முற்றுகைப் போராட்டம், அப்போராட்டத்தில் தமிழ்நாட்டின்  அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றுச் சரித்திரம் படைக்கப் போகிறார்கள்.*



*🌟கடந்த காலங்களில் கூட்டுப் போராட்டங்களே நம் கோரிக்கைகளின் வெற்றியைத் தீர்மானித்தன என்பது வரலாறு.  தமிழ்நாட்டின் ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எந்த ஒரு கூட்டுப் போராட்டமும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.  அதை நோக்கிய பயணம் தான் மே-8.*



*🌟இன்று தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகளாக உள்ள*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,*


*⚡தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து*


*ஆகிய கோரிக்கைகளுக்காக வேறு எந்த இயக்கமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு களப்போராட்டங்களை நடத்திய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை காழப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது திட்டமிட்டோ அல்லது உள்நோக்கத்தோடோ அல்லது கடந்தகால போராட்ட நிகழ்வுகளை அறியாமலோ அல்லது ஞாபக மறதியிலோ விமர்சிக்கும் ஒரு சில நண்பர்களுக்கு*


*⚡01.06.2009-க்குப் பிறகு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாகவோ அல்லது கூட்டு நடவடிக்கையாகவோ நடத்திய களப்போராட்டங்களை கீழக்கண்டவாறு பட்டியலிடுகிறோம்.*


*தெரிந்து கொள்க! தெளிந்து கொள்க!தேவையேற்படின் இதே பிரச்சனைக்காக பிற இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை ஒப்பிட்டு உணர்ந்து கொள்க!*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனிச்சங்கப் போராட்டங்கள்:*


*⚡02.07.2009 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡07.07.2009 - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளருடன் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡30.08.2009 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம்*


*⚡29.09.2009 - ஒரு நபர் குழுவுடன் மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡18.02.2010 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡03.03.2010 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡02.08.2010 - உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு*


*⚡07.01.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡29.01.2011 - மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்துடன் தர்ணா*


*⚡10.02.2011 - தற்செயல் விடுப்புப் போராட்டம்*


*⚡27.07.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡18.08.2011 - சட்டமன்றக் கட்சித்தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு*


*⚡28.01.2012 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡10.04.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡11.07.2012 - மூவர் குழுவிடம் விண்ணப்பம் அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡07.11.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡15.03.2013 - மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡10.04.2013 - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு - சென்னை*


*⚡13.07.2013 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡30.08.2013 - மாவட்டத் தலைநகரங்களில் மறியல்*


*⚡12.06.2014 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡04.11.2016 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡20.11.2016 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡03.02.2017 - தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போர் - சென்னை*


*⚡31.03.2017 - 8வது ஊதிய மாற்றக் குழுவிடம் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கு கொண்ட கூட்டுப் போராட்டங்கள் 12.10.2009முதல் 15.10.2009 முடிய-டிட்டோ ஜேக் சார்பில் அஞ்சல் அட்டை இயக்கம்*


*⚡19.09.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡24.10.2010 - டிட்டோ ஜேக் சார்பில் கோட்டை நோக்கிப் பேரணி சென்னை*


*⚡20.11.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡27.12.2010 முதல் 30.12.2010 முடிய- டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் மறியல்*


*⚡02.02.2014 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡06.03.2014 - டிட்டோ ஜேக் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தம்*


*⚡08.03.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர் பேரணி*


*⚡19.04.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர்  உண்ணாவிரதம்*


*⚡01.08.2015 - ஜேக்டோ சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் சென்னை*


*⚡08.10.2015 - ஜேக்டோ சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம்*


*⚡30.01.2016 முதல் 01.02.2016 முடிய- ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல்*


*⚡15.02.2016 முதல் 17.02.2016 முடிய-அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்*


*⚡18.02.2016 முதல் 19.02.2016 முடிய- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்*


*⚡18.07.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡05.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பெருந்திரள் முறையீடு*


*⚡22.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம்*


*⚡07.09.2017 முதல் 15.09.2017 முடிய-ஜேக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்*


*⚡24.11.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் வட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡21.02.2018 முதல் 24.02.2018 முடிய-ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் தொடர்மறியல்*



*🌟ஜேக்டோ ஜியோவின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நம் பேரியக்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் களத்தில் செயலாற்றி வருகிறது.*



*🌟இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியத்தைப் பெறும் முனைப்போடு செயலாற்றி வருகிறது.*



*வில்லிலே இருந்து புறப்பட்ட கனையைப் போல இலக்கை நோக்கி மிகச்சரியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இலக்கை அடையும்வரை அதன் பயணம் நில்லாது. விமர்சன வெளிச்சத்தில் பயணிப்போம். வெல்லும் வரை பயணிப்போம்.இறுதி வெற்றி நமதே!*



*“களப்போராட்டங்களில் பத்துமுறை தோற்றுவிட்டோம் என்று துவண்டுவிடாதே! பத்துமுறை தோற்றாலும் பதினோறாவது முறையும் போராட எழுந்து நிற்கிறோம் என்று எழுச்சிகொள்!”*

*- மாமேதை லெனின்.*


 

⚡தோமையுடன்

                                           

*தோழர்.ச.மயில்,*    

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм












3 comments:

மனம் said...

இவ்வளவு பெரிய விளக்கம் எதற்கு ஒரே கோரிக்கை அது இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடினை களைதல் என்பதை மட்டும் வைத்து இந்த tnptf போராட தயாரா ? அது முடியாது அல்லவா அதனால் தான் இ்ந்த இடைநிலை ஆசிரியர்கள் டெட் & 2009 நியமன ஆசிரியர்கள் சி.பி.எஸ் அது பற்றி எங்களுக்கு கவலையில்லை அது தலையை விட்டு வாலை பிடிப்பது போல.. அது 27 மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம்

மனம் said...

அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரோ இல்லையோ எங்கள் கோரிக்கை மட்டும் தனியே தெரியவேண்டும் அதுதான் எங்கள் திட்டம். 4200 தரவூதியம் எங்களுக்கு தேவையில்லை சம வேலைக்கு சம ஊதியம் போதும் இரண்டு ஊக்க ஊதியம் பெற்றும் 5 ஆண்டுகள் ஆகியும் எங்கள் ஊதியம் 33000 த்தை தாண்ட வில்லை ஆனால் 2006 நியமனம் பெற்ற அதே இ.நி ஆ கள் 50000 தாண்டியது எப்படி அந்த1.86 தானே
அப்போது மட்டும் நம்ம பிரச்சனை தீர்ந்தது என்று சுயநலமாாக இருந்துவிட்டு அடுத்துவரும் எங்களை பற்றி கவலைபடாத உங்களுடன் நாங்கள் கைகோர்க்க வேண்டுமா.

மனம் said...

1.86 வேண்டாம் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்த 9300-4200 தான் வேண்டும் அதுவரை எங்கள் போராட்டாம் தொடரும் என அப்போதே போராட வேண்டியதுதானே. இன்று நாங்கள் தனியாக போராட காரணமே நீங்கள் தானே ...