*பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாடு குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களின் சுற்றறிக்கை*
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 14 நாள் : 24.09.2018;*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக உருவெடுத்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாட்டுப் பணிகள் மாநிலம் முழுவதும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் ஆசிரியத் தோழர்களும், சகோதரிகளும்; சென்னை நோக்கிய பயணத்திற்குத் தயாராகிவிட்டார்கள்.*
*⭐சில மாவட்டங்களிலிருந்து இன்று (24.09.2018) இரவே நம் இயக்கப் பதாகைகளுடன் வாகனங்கள் புறப்பட்டுவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின்; சென்னை நோக்கிய அணிவகுப்பு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாடு இதுவரையில் கண்டிராத உணர்வலைகளைஆசிரியர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.*
*⭐களத்தில் அடித்த கதிர் தானியமாய் களஞ்சியத்தில் சேர்ந்தால்தான் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி. களத்தில் ஆற்றிய பணி மாநாட்டு அரங்கில் எதிரொலித்தால்தான் களப்போராளிகளுக்கு நெகிழ்ச்சி.*
*⭐தமிழகம் முழுவதும் காவல்துறை உளவுப்பிரிவினரின் நுணுக்கமான கண்காணிப்பு நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிகழ்வு என்றால் அடி முதல் உச்சிவரை அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இம்மாநாடும் விதிவிலக்கல்ல. மாநாடு தொடர்பாக வட்டார நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை உளவுப்பிரிவு நண்பர்களின் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.*
*⭐மாநாடு தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறையின் உச்சபட்ச, உயர்அலுவலர்கள் வரை மாநில நிர்வாகிகள் பலமுறை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அத்தனை நிகழ்வுகளையும் தாண்டி காவல்துறையின் அனுமதியுடன் மாநாட்டுக்களம் உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.*
*⭐மாநாட்டிற்கு வரும் நம் பேரியக்கத் தோழர்கள் கவனிக்க வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:*
*⭐மாநாடு மிகச்சரியாக காலை 9 மணிக்கு துவங்கிவிடும். எனவே, மாநாட்டிற்கு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் காலை 9 மணிக்குள் அரங்கத்திற்குள் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு பயணத்திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.*
*⭐மாநாடு ஒரே அமர்வாக நடைபெறுகிறது. மாநாட்டு அரங்கினுள் குடிநீர் வசதி உண்டு. உணவு ஏற்பாடு இல்லை. அன்று ஒருநாள் மட்டும் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் உணவு எடுத்துக்கொள்ளத் தோழர்கள் தயாராகிக் கொள்ளவும். உணவு உட்கொள்வதைக் தவிர்க்க இயலாத நிலையில் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் தேவையான உணவுப் பொருட்களைக் கையில் வைத்துக் கொள்ளவும். மாநாடு நடைபெறும் போது உணவுக்காக யாரும் அரங்கைவிட்டு வெளியேறக்கூடாது.*
*⭐மாநாடு நடைபெறும் அண்ணா கலையரங்கம் சென்னை மாநகரின் பிரதானப் பகுதியில் மெரினா கடற்கரையில் அண்ணா எம்.ஜி.ஆர் சமாதிகளுக்கு எதிர்புறம் நடந்து செல்லும் தூரத்திலே உள்ளது.வாகனங்களில் வருபவர்கள் மாநாட்டு அரங்கிற்கு அருகில் இறங்கி வாகனங்களை மெரினா கடற்கரையில் பார்க்கிங் செய்ய அனுப்பவும்.*
*⭐இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.இராணுவ மிடுக்குடனும்¸ கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நம் பேரியக்கத் தோழர்கள் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.நம் பேரியக்கத்தின் இயல்பிற்கும், இலக்கணத்திற்கும் வலிமை சேர்க்கும் வகையில் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும்.*
*⭐மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதால் மாநாடு முடியும்வரை நம் தோழர்களும், சகோதரிகளும் மாநாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனித்தன்மையும், தன்னிகரற்ற இயல்பும் வெளிப்பட வேண்டும்.*
*⭐தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்குகிற மிகப்பெரிய மாநாடு இது.*
*⭐மாநாட்டின் வெற்றியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் பங்கு உள்ளது.*
*⭐இதுபோன்றதொரு எழுச்சிமிகு, உணர்வுபூர்வமான, ஒப்பற்ற மாநாட்டை நம்மால் மட்டுமே நடத்த முடியும்.*
*⭐வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்கான இம்மாநாடு அரசின் கேளாச்செவிகளை எட்டட்டும். நம் கோரிக்கை வெல்லட்டும்.*
No comments:
Post a Comment