Tuesday 23 October 2018

*திருப்பூரில் கல்வித்துறை நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மதவெறிக் கருத்துக்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_88.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப்பொருளாளர் க.ஜோதிபாபு ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை*

               

*⭐திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் 22.10.2018 அன்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.*


               

*⭐“வரலாற்றுத் தொகுப்புப் பேரவை” என்னும் தலைப்பில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பேசிய எஸ்வைஸ்யா யோகா பல்கலைக்கழகம் என்ற அமைப்பை சேர்ந்த திரு.சுப்பிரமணியம் என்பவரும், இதிகாசங்கலானா சமிதி என்ற அமைப்பின் தென் மாநிலச்செயலாளர் திரு.டி.வி.ரெங்கராஜன் என்பவரும் அறிவியலுக்கு ஒவ்வாத, ஆதாரமற்ற, பிற்போக்குத்தனமான, மதவாதக் கருத்துக்களை முன்வைத்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். மேலும், RSS, சங்பரிவார் போன்ற அமைப்புகளின் மதவெறிக் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தியோடு இன்றைய கல்விமுறையை மிகக்கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளனர்.*



*⭐“ஓம்” என்னும் மந்திரச்சொல்லை நாள்தோறும் பாடபோதனை துவங்கும் முன்பு மாணவர்கள் உச்சரித்தால் கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் எனவும், குருகுலக்கல்வி முறை எப்போது இல்லாமல் போனதோ  அன்று முதல் நாடு நாசமாகிவிட்டதெனவும், விமானம், அறுவைச் சிகிச்சை போன்றவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் இருந்ததாகவும், இராமாயாணம், மகாபாரதம் ஆகியவற்றை ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டும் எனவும் பேசியதோடு பசுவின் புனிதம் பற்றியும், பசுவின் உடலிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் அற்புதமானவை என்றும் கல்விக்குத் தொடர்பில்லாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசியுள்ளனர். இவையனைத்தும் திருப்பூர் மாவட்டக் கல்வித்துறையின் தலைமை அலுவலரான மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.*


*⭐கருவிலே இருக்கும் குழந்தைகளுக்குக் கூட அறுவைச்சிகிச்சை செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய கால கட்டத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் கல்வியை அறிவியல் மனப்பான்மையோடு அணுகவேண்டிய நிலயில் இவ்வாறு விஷக்கருத்துக்களை விதைப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*


  

*⭐“வரலாற்றுத் தொகுப்புப் பேரவை” என்ற பெயரில் தமிழகத்தில் வேறெங்கும் இவ்வாறு எந்தவொரு கூட்டமும் நடைபெறாத நிலையில் திருப்பூரில் மட்டும் அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதற்கு என்ன காரணம்? அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்களுக்கும் கல்வித்துறைக்கும், கல்விக்கும் என்ன தொடர்பு? யாரிடம் அனுமதி பெற்று அக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஏற்பாடு செய்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை பதில் சொல்லியாக வேண்டும்.*


*⭐திட்டமிட்டு உள்நோக்கத்தோடு இதுபோன்றதொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்ட திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாக துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*


*⭐இதுபோன்ற அத்துமீறிய நிகழ்வுகள் இனிமேல் தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் நடைபெறாமல் தடுக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: