Sunday, 9 December 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் களப்பலிகள் அல்ல களப்புலிகள் எதற்கும் அஞ்சாமல் நமது கோரிக்கை நிறைவேறும் வரை உறுதியோடு பயணிப்போம் பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_9.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 26 நாள் : 09.12.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. _“ இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைக்காக உச்சகட்டப் போராட்டத்தை நடத்திய ஒரே இயக்கம்”_ என்ற வரலாறு எழுதப்பட்டுவிட்டது. அரசாணை எரிப்புப் போராட்டம் என்பது அவ்வளவு எளிதான போராட்டமல்ல.  கடந்தகால வரலாறுகளை  தெரிந்தவர்களுக்கு அது நன்கு புரியும்.*


*⭐1985-ல் ஜேக்டீ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 15000 பெண் ஆசிரியர்கள் உட்பட 65000 ஆசிரியர்கள் ஒரு மாதத்திற்கு மேல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் 45 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். இதுபோன்ற அளப்பரிய தியாகங்களின் மூலமாகத்தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்தது என்பது வரலாறு.*


*⭐அதன்பிறகு கூட்டு நடவடிக்கையாகவோ, தனிச்சங்க நடவடிக்கையாகவோ எந்தவொரு ஆசிரியர் இயக்கமும் அரசாணை எரிப்புப் போராட்டத்தை அறிவித்த வரலாறு என்பது இல்லை. இத்தகு நிலையில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மீட்டெடுக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து பல களப் போராட்டங்களை நடத்தியிருந்தாலும் கூட எத்தகு விளைவையும் எதிர்கொள்ளுகிற உறுதியோடுதான் அரசாணை எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது.*


*_“சிறைக்குச் செல்வோம்; பல நாட்கள் சிறைச்சாலையில் அடைக்கப்படுவோம்”_ என்று தெரிந்தே களத்திற்கு வந்தார்கள் நம் இயக்க உறுப்பினர்கள். 26.11.2018 அன்று பல மாவட்டங்களில் காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு பின்பு மாலையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டுமே 5000க்கு மேல் என்று காவல்துறையின் புள்ளி விவரமே தெரிவிக்கிறது.*


*⭐காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடாத மீதி மாவட்டங்களில் களத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டியுள்ளது. ஆக குறைந்தபட்சம் 10000 ஆசிரியர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிற போராட்டத்தை நடத்துகிற வலிமையும் வல்லமையும் தமிழ்நாட்டிலே _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு மட்டுமே உண்டு_ என்ற வரலாறு படைக்கப்பட்டுள்ளது.*


*⭐ஏதோ ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று நினைத்து ஆசிரியர்கள் களத்திற்கு வரவில்லை.  மறியலில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுவோம் என்று நினைத்து ஆசிரியர்கள் களத்திற்கு வரவில்லை. சிறைக்குச் செல்வதற்கு தயார் நிலையிலேதான் பெண் ஆசிரியச் சகோதரிகள் உட்பட அனைவரும்  களத்திற்கு வந்தார்கள். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு இரவு 7 மணி வரை விடுவிக்கப்படாத நிலையில் பெண் ஆசிரியர்கள் _“ எங்களை ஏன் இந்த மண்டபத்திலேயே வைத்துள்ளீர்கள்? எங்களை சிறைக்குக் கொண்டு செல்லுங்கள்”_ என்று வாதம் புரிந்த காட்சிகள் பெண் ஆசிரியர்கள் எத்தனை உறுதியோடு போராட்டக்களத்திற்கு வருகை தந்தார்கள் என்பதை நன்கு உணர்த்தியது.*


*⭐போராட்டம் முடிந்து நான்கைந்து நாட்கள் கழித்து பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் நம் பொறுப்பாளர்கள் மீதும், உறுப்பினர்கள் மீதும் FIR பதிவு  செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு 17(ஆ) பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள குறிப்பாணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல போராட்ட தினத்தன்று கைது செய்யப்படாதவர்களையும் தேடித்தேடிக் கண்டிறிந்து 17(ஆ) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*


*⭐இதன்மூலம் _“ இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய இழப்பை மீட்டெடுப்பதற்கான களப்போரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்லாயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்கள் 17(ஆ) பெற்றார்கள்”_ என்ற புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நாம் நடத்திய போராட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நாம் நடத்திய போராட்டம் நிச்சயமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு நியாயம் பெற்றுதரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆணை எரிப்புப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. அந்த வரலாறு மீண்டும் நிச்சயம் நிகழும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. ஒருவேளை உடனே நிகழாவிட்டாலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீண்டும் உறுதியுடன் களத்தில் நிற்கும். இடைநிலை ஆசிரியர்களின் உரிமை மீட்கப்பட்டால் அதற்கு உரிமை கொண்டாடும் காட்சிகளும் இங்கே அரங்கேறும். ஆசிரியர் இயக்க வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் புதிதல்ல.*


*⭐இன்றைக்கும் நம் இயக்க உறுப்பினர்கள் மீது காவல்துறையால் போடப்பட்டுள்ள FIR, நம் இயக்க உறுப்பினர்களுக்கு கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள 17(ஆ) ஆகியவற்றை சங்கக் காழ்ப்புணர்ச்சியோடு நோக்கி அதை மகிழ்ந்து கொண்டாடுகிற சில மாற்றுச் சங்க நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அது மட்டுமல்ல நம் இயக்க உறுப்பினர்களை அணுகி அவர்களை அச்சுறுத்துகிற பணியையும் கூட அவர்கள் பல இடங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வேடிக்கை மனிதர்களின் விபரீதப் புத்தியை நினைத்தால் அவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.  அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். காரணம் அவர்களது சங்க ஞானம் என்பது அவ்வளவுதான். அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும், வார்க்கப்பட்ட விதமும் அப்படி என்பதுதான்.*


*⭐உரிமையை மீட்டெடுக்கும் களப்போரில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களைக்கூட துயரங்களாகக் கருதி மகிழ்பவர்கள் நிச்சயமாக நல்ல சங்கவாதிகளாக இருக்க முடியாது. அசிங்கவாதிகளாகத்தான் இருக்க முடியும். போராட்டக்குணத்தை,  போராட்டக்களத்தை பாராட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அமைதி காப்பது என்ற நிலையிலாவது அவர்கள் இருப்பது என்பதுதான் நாகரிகம் என்பதைத் தொடர்புடையவர்கள் புரிந்து  கொள்வது நல்லது. _“குறைந்தபட்சம் தான் சார்ந்திருக்கும் சங்கத்தால் இப்படி ஒரு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்த முடியுமா? அல்லது அறிவிக்கவாவது முடியுமா?”_ என்பதையும் அவர்கள் மனச்சாட்சியை உலுக்கி கேட்டுக்கொள்வது நல்லது.*


*⭐அன்று இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்டு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருந்த தியாகிகளைப் பார்த்து கேலி செய்த கூட்டமும் இருக்கத்தான் செய்தது. அன்று மத்திய அரசுக்கு இணையான ஊதியம்கோரி அரசாணை எரிப்புப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கானோர் சிறைச்சாலைகளிலே அடைக்கப்பட்டிருந்தபோது பள்ளிகளிலே மரக்கன்றுகளை நட்டிக்கொண்டிருந்த கூட்டமும் இருக்கத்தான் செய்தது என்பதை இப்போது நாம் நினைவுகூற வேண்டியுள்ளது.*


*⭐அரசாணை எரிப்புப்போராட்டத்திற்கு வருகை தந்தவர்கள் _“களப்பலிகள் அல்ல; களப்புலிகள்”_ என்பதை காகிதப்புலிகள் புரிந்துகொள்ள வேண்டும். FIR களைக் கண்டும், 17(ஆ)க்களைக் கண்டும் அஞ்சுகிற இயக்கமல்ல தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எத்தகு இழப்புகள் ஏற்படினும் அதை மீட்டெடுக்கும் வல்லமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு உண்டு.*


*⭐காவல்துறை போராட்ட தினத்தன்று போராடியவர்களை விட்டுவிட்டு தற்போது தேடித்தேடி பெயர்களைச் சேகரித்து  வழக்குப்பதிவு  செய்கிறது. ஆசிரியர்களுக்குப் பணப்பலன்களை அனுமதிக்க கையூட்டை எதிர்பார்த்து பலமாதங்கள் கோப்புகளை கிடப்பிலே போட்டுவைக்கும் நேர்மையின் சிகரங்களாக விளங்கும் சில கல்வித்துறை அலுவலர்கள் ஏதோ மிகப்பெரிய ஆயுதம் தங்கள் கையில் கிடைத்து விட்டதைப்போல இரவு பகலாக 17(ஆ)க்களை மின்னல் வேகத்தில் பள்ளி பள்ளியாக, வீடு வீடாகச் சென்று வழங்கிய காட்சிகளும் நடைபெற்றுள்ளன. இவர்கள் கல்வி அலுவலர்களாக வருவதற்குக்கூட இதே சங்கப்போராட்டங்களே காரணம் என்பதை உணராத தன்னிலை மறந்தவர்ககளாக அதிகார மயக்கத்தில் இவர்கள் உள்ளனர்.*


*⭐17(ஆ) க்குப் பதிலளிக்க கால அவகாசமே கொடுக்காமல், அடிப்படை விதியே தெரியாமல் உடனே விளக்கம் தர வேண்டும் என்று கூறிய மாவட்டக்கல்வி அலுவலர்களும், 48 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் நோயாளிக்கு கெடு விதித்ததைப்போல காலக்கெடுவிதித்த  மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர முடிகிறது.  இப்படிப்பட்ட அலுவலர்கள் இதே வேகத்தில் ஆசிரியர்களின் அலுவல் ரீதியிலான கோப்புகளை முடிப்பதிலும் வேகம்  காட்டினால் சிறப்பாக இருக்கும்.*


*⭐நிறைவாக, அரசாணை எரிப்புப்போராட்டக்களத்திற்கு வருகைதந்த புடம்போட்ட தங்கங்களாய் மின்னிக்கொண்டிருக்கும் நம் பேரியக்கத் தோழர்களே! ஆசிரியச் சகோதரிகளே! காவல்துறையின் நடவடிக்கைகளையும், கல்வித்துறையின் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் மாநில மையம்  இமைப்பொழுதும் சோராமல் செய்து கொண்டிருக்கிறது. அச்சத்தைத் துச்சமென தூக்கியெறிந்து உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் களம்கண்ட தோழர்களே! நம் வரலாறு நாளை நிச்சயம் பேசப்படும். _இது உறுதி._*


*_“தேங்கிக் கிடக்கும் குட்டைதான் கல்லெறிந்தால் கலங்கும், ஒடும் நதி ஒருபோதும் கலங்குவதில்லை. இயங்கிக் கொண்டே இரு எந்தச் சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது!”_*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: