Sunday, 9 December 2018

*JACTTO-GEOவிடம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்❗ சித்திக்-ஸ்ரீதர் குழுக்களும்‼*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡




https://tnptfayan.blogspot.com/2018/12/jactto-geo.html


_✍🏼செல்வ.ரஞ்சித்குமார்._


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறைகள் நீண்டகாலக் கோரிக்கைகளாக உருப்பெற்று அதைத் தீர்க்கக் கோரும் களப் போராட்டங்கள் தீவிரமடையும் சூழலிலும் அதை நேரடியாகக் களையாது கோரிக்கை மீதான *உரிமை வேட்கையைத் தணிக்கும் விதமாகவே குறைதீர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழகம் கண்ட வரலாறு.*


இக்குழுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்வையில் அரசின் தீரமிகு செயல்பாடாகவும், வழக்காடு மன்றப் பார்வையில் தீர்ப்பிற்கான செயல்பாடாகவும் அமைந்துள்ளதே அன்றி *அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கை களையும் தீர்விற்கான செயல்பாடாக அமைந்ததே இல்லை.*


அதற்கு 7-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின் (நமது பார்வையில் 6th Pay Commission) அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவே சாட்சி. எனவே தான் 8-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின்பும் கோரிக்கைகள் களையப்படாது போராட்டங்கள் தொடர்கின்றன.


தற்போதும் ஜாக்டோ-ஜியோ மீண்டுமொரு வீரியமிகு போராட்ட முகட்டில் நிற்கையில், அதன் கடந்த கால களப்போராட்டங்களில் ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளப்படாத CPS நீக்க வல்லுந‌ர் குழுவும், அரசு ஊழியர் ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.


உண்மையில் *JACTTO-GEO போராட்டங்கள் எந்நிலையிலும் அரசு அமைக்கும் குழுக்களைக் காரணம் காட்டி நகர்த்தப்படவோ - நிறுத்தப்படவோ இல்லை* என்பது எனது அனுபவத் தெளிவு.


நான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பினும் அதை மறந்துவிட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இதன்வழி அதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், தற்போது குழுவைக் காட்டி ஏமாற்றும் வித்தைக்குள்ளாகச் சிலர் சிக்குண்டுள்ளனர்.


தற்போதும் ஓய்வூதிய வல்லுந‌ர் குழு & ஊதிய முரண்தீர் ஒரு நபர் குழு இரண்டையும் கவனத்தில் ஏற்றி நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கண்கள் பூத்துப்போய்க்கிடக்கின்றன.


இவ்விரண்டுமே JACTTO-GEOவின் கோரிக்கைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை என்பதை முன்பே உணர்ந்ததாலேயே குழுக்களின் முடிவிற்குக் காத்திருக்காது களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது JACTTO-GEO.


JACTTO-GEO-வின் போக்கினை உணர்ந்தோர் அனைவரும் வேண்டுவது, *10.12.2018-ற்குப் பின் காலம் தாழ்த்தாது 11.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த களத்தில் இறங்க வேண்டும்* என்பதே.


ஏனெனில் வழக்காடு மன்ற அனுபவங்களும், அரசின் சாக்குப்போக்கான உறுதியளிப்புகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது, *"காத்திருப்புகள் அல்ல களப்போராட்டமே தீர்வைத் தரும்!"* என்பதைத்தான்.


_கற்று மறந்தோரின் நினைவூட்டலுக்காக குழுக்கள் அமைக்கப்பட்ட முறைமையும் ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடைமுறையையும் பறவைப் பார்வையாக இங்கே பகிர்ந்துள்ளேன்._


*🔛 10.02.2016*


பல கட்டப் களப் போராட்டங்களைக் கடந்து *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் CPS நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.


*🔛 11.02.2016*


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற *அமைச்சர் குழு & ஜாக்டோ கூட்டமைப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.* எனினும், முன்னரே தீர்மானித்திருந்த போராட்ட அறிவிப்பை ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிக்கவில்லை.


*🔛 12.02.2016*


எனவே, *ஓய்வூதியக் கோரிக்கையோடே இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய கோரிக்கையையும் வலியுறுத்தி* திருச்சி மாநிலச் செயற்குழு முடிவின்படி *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில்* உடன் இணைந்தன. *19.02.2016-ல் சட்டப்பேரவையில் முதல்வர், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதிய (ரூ.1,500) உயர்வு, சமையல் உதவியாளர் பணப்பயன் ரூ.25,000 உயர்வு, குழுக் காப்பீட்டு தொகை 3 லட்ச ரூபாய் உயர்வு, அரசு ஊழியர் நிர்வாக தீர்ப்பாயம்* உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையோடே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னரே *CPS-ல் இறந்த பணியாளருக்கு பங்களிப்பு தொகை வழங்க ஆணை* வெளியிடப்பட்டது.


*🔛 19.02.2016*


பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான* சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க *வல்லுந‌ர் குழு* அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.


*🔛 26.02.2016*


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய *G.O.Ms.No.65, Finance (PGC) Department, dated 26.02.2016-ன்* படி *திருமதி.சாந்தசீலா நாயர் இ.ஆ.ப* தலைமையில் வல்லுந‌ர் குழு அமைக்கப்பட்டது.


_(அதன்பின்னர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டிற்கும் மேலாகக் காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுந‌ர் குழு திரு.ஸ்ரீதர் தலைமையில் தற்போது அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.)_


*🔛 07.09.2017*


பலகட்ட தனிச்சங்கப் போராட்டங்களையும் பிரிவினைகளையும் கடந்து உருப்பெற்ற *JACTTO-GEO கூட்டமைப்பு செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.


*🔛 15.09.2017*


அரசின் நெருக்கடிகள், நீதிமன்றத் தடைகள், அனைத்தையும் கடந்து தீரமுடன் 8 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் *சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை JACTTO-GEOவிற்கு அளித்த உத்தரவாதத்தின் படி 15.09.2017 பிற்பகல் 2 மணிக்கு பணிக்குத் திரும்பினர்* ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்.


*🔛 21.09.2017*


JACTTO-GEO-வின் கோரிக்கைகள் மீதான நியாயத்தை உணர்ந்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால், *தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017-க்குள் பெறப்படும்* என்று உறுதியளித்தார்.


மேலும், 30.09.2017-ற்குள் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டதோடு, *13.10.2017-ல் புதிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்  23.10.2017-ல் இடைக்கால நிவாரணம் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைநிறுத்தம் தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது. வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது* என நீதிமன்றம் உத்தரவிட்டது.


*🔛 11.10.2017*


இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகள் *G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, Dated: 11.10.2017.-ன்* படி வெளியிடப்பட்டது.


*🔛 08.12.2017*


ஊதிய முரண்பாடுகளோடே நடைமுறைக்கு வந்த ஊதியக்குழு அரசாணை, CPS நீக்கக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமை & ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட சூழலில் 08.12.2017 மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று அடுத்த கட்ட போராட்ட அறிவிப்புகளோடே, சனவரி 4-வது வாரத்தில் இருந்து, *ஜாக்டோ-ஜியோவின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக சுழற்சி முறையில், சென்னையில் காலவரையற்ற தொடர் மறியலில்* ஈடுபடுதல் எனவும் அறிவித்தது.


*🔛 15.12.2017*


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்திப்பதாக இருந்த நிலையில், தவிர்க்க இயலாத அலுவல் காரணமாக முதல்வரை நேரில் சந்திக்க இயலாததால் *கோரிக்கை & நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான மனுவை முதல்வர் அலுவலகத்திலும், தலைமைச் செயலர் & நிதித்துறை முதன்மைச் செயலரிடம்* வழங்கப்பட்டது.


*🔛 08.01.2018*


மாண்புமிகு தமிழக *ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்* அவர்கள் தனது ஆளுநர் உரையில் *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒருநபர் குழு* அமைக்கப்படும் என அறிவித்தார்.


*🔛 19.02.2018*


ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாத சூழலில் வழக்கமான காலம் கடத்தும் நடவடிக்கையாக *FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.57, Dated: 19th February, 2018-ன் படி M.A.சித்திக் இ.ஆ.ப* அவர்களின் தலைமையில்  *31.07.2018-ற்குள் அறிக்கை சமர்ப்பிக்க* ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.


*🔛 21.02.2018*


நீண்ட கால கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது 30.11.2017-ல் சமர்ப்பிப்பதாக தலைமைச்செயலாளரே நீதிமன்றத்தில் உறுதியளித்த CPS நீக்க வல்லுநர்குழுவின் அறிக்கையே வெளிவரா சூழலில் ஊதியத்திற்கான ஒரு நபர் குழு அமைத்ததன் நோக்கம் உணர்ந்து, முன்னர் அறிவித்தபடியே சிறு கால தாமதத்துடன் *21.02.2018 முதல் 4 நாள்களாக சென்னையில் ஜாக்டோ-ஜியோ-வின் மறியல்* போராட்டம் நடைபெற்றது.


*🔛 24.02.2018*


4 நாள்கள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவத்தினைத் திட்டமிடக்கூடிய  ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மீண்டுமொரு மாவட்ட மறியலைத் தொடர்ந்து, *1985, 1988--ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் போன்று* மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை 08.05.2018 அன்று, இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி *தலைமைச் செயலக முற்றுகை நடத்துதல்* எனத் தீர்மானிக்கப்பட்டது.


*🔛 08.05.2018*


*சென்னையே முடங்கும் அளவிற்கு இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்கள் சென்னையில் கூடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட* முயன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோரை அடைக்க தற்காலிகச் சிறையின்றி தலைநகரே திக்குமுக்காட இறுதியில் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நிரம்பியது.


*🔛 11.06.2018*


*ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் & மாநில நிர்வாகிகள் சென்னையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.* நான்காம் நாளில் அரசின் அடக்குமுறைகளால் முடிவிற்கு வந்தது.


*🔛 03.12.2018*


மீண்டும் பலகட்ட சிக்கல்களையும் போராட்டங்களையும் கடந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் இணைந்ததையடுத்து ஒருவார கால தாமதத்துடன் 04.12.2018-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கும் முன்னாக *நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேலைநிறுத்தம் 10.12.2018 வரை ஒத்திவைக்கப்பட்டது.*


*🔛 10.12.2018 ❓❓❓*


_முதல் 10 பத்திகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு 10.12.2018-ஐ எதிர்கொள்ள JACTTO-GEO மாநில உயர்மட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்._


கோரிக்கைகளை உடன் நிறைவேற்றாது வேறு ஏதேனும் காரணங்களோ அல்லது வழக்கமான வெற்று வாக்குறுதிகளோ அரசின் தரப்பில் தரப்படுமாயின் *உடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியாக வேண்டும் என்பதே ஜாக்டோ-ஜியோவிடம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*


*_உரிமை வேட்கையோடே உள்ள ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஏதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஜாக்டோ-ஜியோ❓❓❓❓❓*_


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: