Wednesday 29 May 2019

*அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில் பல்வேறு குழப்பங்களும், விதிமீறல்களும், அநீதிகளும் எழுந்துள்ளன - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post_29.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16  நாள் : 29.05.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்!*


*🌟2019 – 2020 ஆம் கல்வியாண்டு தொடங்க இருக்கிறது.  புதிய கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் கல்விப்பணியையும், இயக்கப்பணியையும் முன்னெடுத்துச் செல்ல மாநிலமையத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.* 


*🌟தமிழ்நாட்டு ஆசிரியர்கள் பலமுனைத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகளைத் தொடங்கி அவற்றில் முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது நமது பேரியக்கத்தின் கோரிக்கையாகும்.*


*🌟ஆனால், தமிழக அரசு தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிப்பள்ளிகளுடன் இணைந்த 2381 அங்கன்வாடிகளில் நியமனம் செய்து உத்தரவிட்டது.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து நமது இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றோம்.* 


*🌟இது தொடர்பாக பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் தொகுத்த வழக்கில் 22.05.2019 அன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு “ அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது”  என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.*


*🌟அரசுப்பணியில் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருக்கும் ஒருவரை கீழ்நிலைப் பதவிக்கு கொண்டு செல்வது என்பது அரசின் கொள்கை முடிவென்றால் நியாயப்படி அது எப்படி சரியானதாக இருக்கும்.  பல்வேறு துறைகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை அவரவர் பணியாற்றும் துறைகளிலோ அல்லது வேறுதுறைகளிலோ கீழ்நிலைப்பதவிக்கு கொண்டு செல்லும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தால் அதைக் கொள்கை முடிவென்று ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வேதனையும், விரக்தியும் கலந்த கேள்வி தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.*



*🌟நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொடக்கக்கல்வித்துறை 2381 அங்கன்வாடிகளில் உபரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை மின்னல் வேகத்தில் துவங்கிவிட்டது.  கடந்த ஜனவரி மாதம் அங்கன்வாடிகளுக்கு மாறுதல் பணியாணைகள் வழங்கப்பட்ட  ஆசிரியர்கள் பள்ளிகள் திறக்கும் நாளன்றே அங்கன்வாடிகளில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில் பல்வேறு குழப்பங்களும், விதிமீறல்களும், அநீதிகளும் எழுந்துள்ளன என்பதே நடைமுறை உண்மையாகும். அதன்படி கீழ்கண்ட கேள்விகள் நம்முள் எழுகிறது.*



*⚡தொடக்கக்கல்வித்துறையின் உத்தரவின்படி 2017-2018 ஆம் கல்வி ஆண்டின் ஆசிரியர் நிர்ணயக் கணக்கீட்டின்படியே உபரி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பிந்தைய 2018 – 2019 மற்றும் 2019 – 2020 ஆம் கல்வியாண்டுகளில் அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாது உபரி ஆசிரியர்களைப் பணிமாறுதல் செய்வது என்பது அவர்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களின் கல்வியைப்  பாதிக்காதா?*


*⚡ஒரு பள்ளியில் உபரி ஆசிரியர்களைக் கணக்கிடும்போது அப்பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் அவர்களை இளையவர்களாகக் கணக்கிட்டு அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் வழங்கும்போது 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் கூட பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு தொடக்கக்கல்வித்துறை என்ன பதில் சொல்லப்போகிறது?*


*⚡பணிநிலையில் மூத்த, பதவிஉயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் கூட தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இளையவர் என்பதைக் காரணம் காட்டி அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் வழங்கும் நிலை உள்ளது. இது சரியானதா?*


*⚡உபரி ஆசிரியர்கள் என்ற கணக்கில் அங்கன்வாடிகளுக்குப் பணிமாறுதல் அளிக்கப்படும் ஆசிரியர்கள் எதிர்வரும் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி மாறுதலில் செல்ல வாய்ப்பளிக்கப்பட வேண்டும் அல்லவா?  அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால் அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலல்லவா?*


*⚡நீதிமன்ற உத்தரவின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் செய்யப்படவுள்ள நிலையில் உபரி ஆசிரியர்களே இல்லாத ஒன்றியங்களில், காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள ஒன்றியங்களில், ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், உபரியாக இல்லாத ஆசிரியர்களுக்கு அங்கன்வாடி ஆசிரியராக வழங்கப்படும் பணிமாறுதல் ஆணைகளால் அவ்வொன்றியங்களின் மாணவர்கள் நலன் வெகுவாகப் பாதிக்கப்படாதா?*


*⚡பல மாவட்டங்களில் உபரி இடைநிலை ஆசிரியர்களே இல்லாத நிலையில் அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆசிரியர் நியமனம் செய்திட பிற மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து ஆசிரியர்களை நியமனம் செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயலல்லவா?*


*⚡தனியார் சுயநிதிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு காரணம் அங்கு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையே ஆகும்.*


*🌟எனவே, உபரி ஆசிரியர் என்ற கணக்கில் ஆசிரியர்களை பணியிடமாறுதல் செய்துவிட்டு அரசுப்பள்ளிகளையெல்லாம் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றும்போது தனியார் சுயநிதிப்பள்ளிகளோடு எவ்வாறு போட்டி போட முடியும்? மேற்கண்ட கேள்விகளெல்லாம் தமிழ்நாட்டின் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் கருதி நாம் முன்வைக்கும் கேள்விகளாகும். இவற்றை ஆய்வுசெய்து தமிழ்நாட்டின் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்பார்க்கிறது.*



*🌟அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள், சந்தேகங்கள் பாதிப்புகள் தொடர்பாக கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கவனத்திற்கு நமது பேரியக்கம் கொண்டு சென்றுள்ளது.  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு என்பதால், அத்தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியான தொடர் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வழக்கறிஞருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.*



*_“அரசு, சட்டம், நிர்வாகம் இவைகளையெல்லாம் விட நம் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நம்பிக்கையான ஆயுதம் களப்போராட்டமே”  என்பதுதான்._* 

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரக மந்திரம்.  எந்தச்சூழலிலும் போராட்ட ஆயுதத்தை கீழே போடாத நம் பேரியக்கம் 06.05.2019 மதுரை மாநிலச் செயற்குழு முடிவின்படி அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாரத்தலைநகரங்களில் 07.06.2019 அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.*


*🌟தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம்.*  

 

*_“கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆயுதம் போராட்டம் மட்டுமே! நாம் நிராயுதபாணிகளல்ல.... ஏனெனில் போராட்ட ஆயுதத்தை  நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது!”_* 


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனித்துவம் வாய்ந்த இயக்கம். மற்ற இயக்கங்களிலிருந்து வேறுபட்ட இயக்கம்.*


*_“எல்லாப் பறவைகளும் மழைகாலங்களில் கூடுகளில் அடையும்.......!_*


*_ஆனால் கழுகு மட்டும் மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்!_*


*_நீ கழுகாக இரு.........!_*


*- டாக்டர் அப்துல்கலாம்*




🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: