Thursday, 13 June 2019

*அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் - ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_13.html


*மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண் : 10 நாள் : 13.06.2019*


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் விடுத்துள்ள அறிக்கை_*



*🌟தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள 2381 அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ததில் கடும் குழப்பங்களும், விதிமீறல்களும், நடைபெற்றுள்ளதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நலன் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இப்பிரச்சனையில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டு தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் குறைந்தபட்சம் ஒரே மாதிரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*


*🌟நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள 2381 அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவ்வாறு உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சில மாவட்டங்களில் ஒன்றிய அளவில் பணிமாறுதல் செய்யும்போது பள்ளி முன்னுரிமை பார்க்கப்படுவதால் பணிநிலையில் மூத்த 25 அல்லது  30 ஆண்டுகள் பணிமுடித்த இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சில மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு பணியிட மாறுதல் அளிக்கும்போது மாவட்டக்கல்வி அலுவலர்கள் வேண்டிய ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கும், மற்றவர்களுக்கு தொலைதூரத்தில் உள்ள இடங்களுக்கும் பணிமாறுதல் வழங்கியுள்ளனர்.  அவ்வாறு உபரி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கும்போது அவர்களுக்குள் ஒரு கலந்தாய்வு நடத்தி முன்னுரிமையின் அடிப்படையில் இடங்களை ஒதுக்கவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை மாவட்டக்கல்வி அலுவலர்கள் நிராகரித்துள்ளனர்.*


*🌟மேலும், பல மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உபரியாக இல்லாத இடைநிலை ஆசிரியர்களையும், அப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அங்கன்வாடிகளுக்குப் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அப்பள்ளிகளில் 5 வகுப்புகள் உள்ளன என்பதைக் பற்றியோ, அவ்வகுப்புகளுக்கு 23 பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ கல்வித்துறை அலுவலர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.*


*🌟மேலும், பல மாவட்டங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அங்கு உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடமே இல்லாத நிலையிலும் பல இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையுடன் உள்ள அவ்வொன்றியங்களில், மேலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களின்  ஒட்டுமொத்த கல்வி நலனும் பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.*


*🌟மேலும், சில மாவட்டங்களில் உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி இடைநிலை ஆசிரியர்களும் எவ்விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அங்கன்வாடிகளுக்கு மாற்றுப்பணியாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.  சில ஒன்றியங்களில் ஒரே அங்கன்வாடிக்கு சுழற்சிமுறையில் மூன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. அரசின் முடிவின்படி 6 மாதபயிற்சி வழங்கும்போது மூன்றுபேரில் யாருக்கு பயிற்சி வழங்குவது அல்லது மூவருக்குமே பயிற்சி வழங்குவார்களா? என்பது தெரியவில்லை.*



*🌟அங்கன்வாடிகளுக்கு உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் கல்வித்துறை எவ்விதமான விதிகளையும் வகுக்காததால் பெரும்பாலான மாவட்டக்கல்வி அலுவலர்கள் தன்னிச்சையாக விருப்புவெறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.  இதனால் தமிழகம் மூழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் , அச்சமும் ஏற்பட்டுள்ளது.*


*🌟அங்கன்வாடிகளில் LKG,UKG வகுப்புகள்  தொடங்குவதில் மிகப்பெரிய ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே உள்ள 1 முதல் 5 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🌟இன்றளவும் மிகப்பெரிய குழப்பநிலையும், விதிமீறல்களும், முறைகேடுகளும் நடைபெற்றுவரும் அங்கன்வாடி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் ஒரே மாதிரியான நடைமுறையைக் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வித்துறையை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*


🤝தோழமையுடன்;


*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: