Thursday, 12 September 2019

*நியாயமற்ற பணி மாறுதல் உத்தரவு. மன அழுத்தத்தில் ஆசிரியை மரணம். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன அறிக்கை.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_12.html


*_மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண் : 14/2019  நாள்: 12.09.2019_*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச. மயில்_ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:*
   
**
*🛡தொடக்கக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட நியாயமற்ற, விதிகளுக்குப் புறம்பான, அரசாணைகளுக்கு முரணான பணிநிரவல் மாறுதலால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை மா. லதா, 10.09.2019 அன்று மரணமடைந்த செய்தி பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*
   
**
*🛡ஆசிரியை மா. லதா 20 ஆண்டுகளாக அதே ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 30.08.2019 அன்று நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வில், ஒன்றியத்தில் பணியில் மூத்த ஆசிரியரான தனக்கு, தான் பணியாற்றும் திருவிடைமருதூர் ஒன்றியத்திலிருந்து 90 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட பணிமாறுதல் ஆணையால் மிகுந்த மன அழுத்தத்திலும், மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்நிலையில் 10.09.2019 அன்று காலை பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் திடீரென உத்தரவு போட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்து கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நியாயமற்ற பணிமாறுதல் ஆணையால் ஒரு அப்பாவி ஆசிரியர் தனது உயிரை இழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*

**   
*🛡சமீபகாலமாகவே தொடக்கக் கல்வித்துறையில் முன்னுக்குப்பின் முரணான அரசாணைகளும், அரசாணைகளுக்குப் புறம்பான செயல்முறை ஆணைகளும் வெளிவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், உயர் அலுவலர்களின் வாய்மொழி உத்தரவுகள் என்ற பெயரில் அரசாணைகளுக்கு முரணான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும், ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.*
          
**
*🛡கடந்த ஆண்டுவரை உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் என்பது ஒன்றிய அளவிலான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்றது. இவ்வாண்டு பணிநிரவல் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை (1டி) எண்: 217, பள்ளிக்கல்வித் ( ப.க (5(1) துறை நாள்: 20.06.2019 ல் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் பணிநிரவல் செய்ய ஆணையிடப்பட்டது. மேலும், பணிநிரவல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறை ந.க.எண்: 22725/இ1/2018 நாள்: 27.06.2019 ன் படி உபரியாக உள்ள ஆசிரியர்கள் ஓன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு பணிநிரவல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு முன்னுக்குப்பின் முரணான வகையில் பணிநிரவல் தொடர்பான ஆணைகள் வெளிவந்து பல்வேறு மாவட்டங்களால் மிகப்பெரிய குழப்பங்களோடு கடந்த 30.08.2019 அன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.*
   
**
*🛡மேலும், அரசாணைகளுக்கு முரணாக வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் பத்துக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஆரம்பப்பள்ளிகளில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப்பட்டு பணிமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணை (1டி) எண்: 231 பள்ளிக்கல்வித் (சி2) துறை நாள்: 11.08.2010 ன் படி ஆரம்பப்பள்ளிகளில் 60 மாணவர்கள் வரை 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும் பணியாற்ற வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி அரசாணைக்கு முரணாக வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 61 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப்பட்டு பணிமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.*
   
**
*🛡இவ்வாறான வாய்மொழி உத்தரவுகள் மாணவர்களின் கல்வி நலனுக்கும், ஆசிரியர்களின் நலன்களுக்கும் முற்றிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வி வெகுவாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் அப்பள்ளிகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.*
   
**
*🛡அரசாணைகளோ அல்லது எவ்விதமான செயல்முறை ஆணைகளோ இல்லாமல் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் மேற்கண்டவாறு நடைபெற்றுள்ள பணிநிரவல் கலந்தாய்வில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்பு வெறுப்பிற்கும், புரிதலுக்கும் ஏற்ப கலந்தாய்வை நடத்தியுள்ளனர்.*
   
**
*🛡மேற்கண்டவாறு எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத முறையற்ற மாறுதல் ஆணைகளின் காரணமாக ஒரு ஒன்றியத்தில் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் என்று கூறி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பாவி ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நடந்து முடிந்த பணிநிரவல் கலந்தாய்வை ரத்துசெய்து அரசாணைகளுக்கு உட்பட்டு கலந்தாய்வை நடத்தி ஆசிரியர் நலன் காத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*                  
                                                                                                                                     
📩இப்படிக்கு,

*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: