Friday, 31 July 2020

*பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன? - விகடன் கட்டுரை*

*பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன? - விகடன் கட்டுரை*

*🛡️'பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' என்ற செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு மீது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருகிறது.*

*🛡️இந்த நிலையில், ''ஆசிரியர்கள் உயர் கல்வி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை'' என்கிறார் வைகைச் செல்வன்.*

*🛡️'உரிய அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' என்ற தொடக்கக் கல்வித்துறையின் அறிவிப்பு, அதிர வைத்திருக்கிறது. 'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான்யனின் மனதில் அலையடிக்கின்றன.*

*🛡️தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன. உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த பிறகு மேற்படிப்பில் பட்டம் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். முறையாக முன் அனுமதி பெற்று பட்டம் வாங்கிய ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான ஊக்க ஊதியமும் அவர்களது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இப்படியான அனுமதி பெறாமல், பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கே தற்போது தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*_🛡️இதுகுறித்துப் பேசுகிற 'தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி'யின் பொதுச் செயலாளர் ச.மயில், ''தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி படிப்பதற்குத் துறை சார்ந்து அனுமதி பெற வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்தான் இந்த முன் அனுமதியை வழங்குவார்._*

*_🛡️இந்த விதிமுறையை அறிந்திடாத சிலர், பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு பின்னர் அனுமதி கோரியிருக்கிறார்கள். இன்னும் சிலர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்த அதே கையோடு, உயர் கல்வி கற்பதற்கான அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கும் முறையாக விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால், படித்து முடித்து பட்டமும் வாங்கிவிட்ட பின்னரும்கூட, துறை சார்ந்த அனுமதி கிடைக்கப் பெறாதவர்களும் உண்டு. இப்படி பல்வேறு காரணங்களாலும் முன் அனுமதி பெறாதவர்கள் எண்ணிக்கை தமிழ்நாடு முழுக்கவே குறைந்தது 5,000 ஆசிரியர்களாவது இருக்கும்._*

*_🛡️இவர்களுக்குப் 'பின்னேற்பு ஒப்புதல்' என்ற அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் அனுமதி கொடுத்துவந்ததும் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திடீரென பின்னேற்பு ஒப்புதலையும் நிறுத்திவிட்டனர். இது விஷயமாக ஆசிரியர் சங்கங்களும் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 'பின்னேற்பு ஒப்புதல்' வழங்கக்கோரி கேட்டுவந்தோம்._*

*_🛡️ஓர் ஆசிரியர் படிப்பது என்பது நல்ல விஷயம்தானே... ஆனால், அதையேகூட அரசாங்கம் குற்றமாகப் பார்த்துத் தண்டனை கொடுத்தால் அதை என்னவென்று சொல்வது? அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இப்போதோ உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்'' என்கிறார் வேதனையோடு._*

*🛡️இந்த நிலையில், மூத்த ஆசிரியரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவருமான முத்துசாமி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''இது புது பிரச்னை அல்ல... ஏற்கெனவே கடந்த 3 வருடங்களுக்கு முன்பே 'அனுமதி பெறாமல் எப்படிப் படிக்கலாம்... எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சொல்லி, அப்போதைய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார்.*

*🛡️உடனே ஆசிரியர் சங்கத்தினர் அனைவரும் துறை ரீதியாக உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். முடிவில், இந்த ஒருமுறை மட்டும் சிறப்பு அனுமதியாக 'பின்னேற்பு அனுமதி கொடுக்கிறோம்' என்று ஒப்புதல் கொடுத்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் 'பின்னேற்பு ஒப்புதல் வழங்கக்கோரும் விளக்கக் கடிதம்' பெற்று அதைப் பள்ளிக் கல்வித்துறையிடமும் சமர்ப்பித்திருந்தோம்.*

*🛡️இதில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பின்னேற்பு ஒப்புதல் கடிதம் கொடுத்தது பள்ளிக் கல்வித்துறை. ஏனைய ஆசிரியர்களுக்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் சொல்லாமலேயே விட்டுவிட்டது. இதுகுறித்து நாங்களும் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். இந்த வருட ஆரம்பத்தில்கூட இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.*

*🛡️பொதுவாக, இதுபோன்று முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கண்டனம் தெரிவிப்பார்கள்; அல்லது எச்சரிப்பார்கள். இதில், எச்சரித்து விடப்பட்ட ஆசிரியர்களுக்கான தண்டனை என்பது, அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களது பதவி உயர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதேபோல், கண்டனம் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வரையிலும் எந்தவித பதவி உயர்வும் அளிக்கப்பட மாட்டாது.*

*🛡️இந்தக் கண்டனம், எச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆசிரியரது தகுதியையும் பொறுத்து மாறுபடும். இப்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் தண்டனை வழங்கப்பட்டு, 'இனிமேல் இதுபோன்ற தவற்றைச் செய்ய மாட்டேன்' என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அளித்த கடிதங்களும் தலைமைச் செயலகத்துக்கு 2018-லேயே கொடுக்கப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நடந்துமுடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போது புதிதாக மறுபடியும் முதலிலிருந்து இந்தப் பிரச்னையை ஏன் கிளப்பியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.*

*🛡️கரூர், முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்துதான் இப்போது புதிதாகக் கடிதம் வெளியாகியுள்ளது. அதில், தொடக்கக் கல்வித் துறையில், முன் அனுமதி பெறாமல் படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.*

*🛡️2012-ம் ஆண்டுக்குப் பின்பு இதுபோல், முன் அனுமதி பெறாமல் பட்டம் பயின்றவர்கள் யாருமே கிடையாது. இந்தப் பிரச்னைகள் எல்லாமே 2012-க்கு முன்பாக உயர் கல்வி படித்தவர்கள் பற்றியதுதான். அதாவது, அனுமதி பெறாமல், பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை என்பது தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 2,000 பேர், பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 3,000 பேர் என தமிழ்நாடு முழுக்க 5,000 பேர் வரையிலும் இருப்பார்கள்... அவ்வளவுதான். இவர்கள் மீதும்கூட ஏற்கெனவே துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, விளக்கக் கடிதம் கேட்டுப் பெற்றுவிட்ட பிறகு, மறுபடியும் ஏன் இப்போது புதிதாக பிரச்னையைக் கிளப்புகிறார்கள் என்றே தெரியவில்லை...'' என்றார் குழப்பத்துடன்.*

*🛡️இதற்கிடையில், பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிற முக்கியப் புள்ளிகள் சிலர், ''பொதுவாக ஆசிரியர்கள் என்றாலே, தி.மு.க அரசுக்கு ஆதரவானவர்கள் என்ற மனவோட்டம் அ.தி.மு.க அரசுக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் எங்கள் உரிமைகள் ஒவ்வொன்றையும்கூட இந்த அரசில் கேட்டுப் பெறும் நிலையில்தான் வைத்திருப்பார்கள்.*

*🛡️அதனால்தான் ஊதிய உயர்வு, விடுப்பு என எங்களுக்கு உரிய உரிமைகளுக்காக நாங்கள் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நியாயமாக எங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளைக்கூட, 'அரசே தாராள மனதோடு ஆசிரியர்களுக்கு உதவுவது போன்று' விளம்பரம் செய்து ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அளிப்பதுதான் அ.தி.மு.க அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடு.*

*🛡️ஒட்டுமொத்தத்தில், பொதுமக்கள் மத்தியில், 'ஆசிரியர்கள் என்றாலே தகுதிக்கு மீறி அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள், அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்துபவர்கள்' என்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்'' என்று குமுறுகின்றனர்.*

*🛡️ஆசிரியர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் கேட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். நமது செல்பேசி அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து குறுஞ்செய்தி அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை.*

*🛡️பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் மின்னஞ்சல் முகவரிக்கும் நமது கேள்விகளை அனுப்பி வைத்தோம். பதில் வராததைத் தொடர்ந்து அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் பெறுவதற்காக அவரது உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''அமைச்சர் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கிறார்'' என்ற பதில் கிடைத்தது.*

*🛡️இதையடுத்து, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தோம். ''இன்றைய தினம் முதல்வரோடு கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கிறது. நாளை ஈரோட்டில் உள்ள விருந்தினர் விடுதிக்கு வந்துவிடுங்கள்'' என்றார் அமைச்சர். ஆனால், மறுநாள் ஈரோடு விருந்தினர் இல்லத்துக்கு வராத அமைச்சர் செங்கோட்டையன், கதிரம்பட்டியில் நடைபெற்ற 'இலவச கோழி வழங்கும் நிகழ்ச்சி'யில் கலந்துகொண்டார். அங்கேயும் நேரில் சென்று அமைச்சரின் விளக்கம் பெறக் கேட்டு நின்றோம். ''தொடர்ச்சியாகப் பணிகள் இருக்கின்றன. எனவே, மாலை வீட்டுக்கே வந்துவிடுங்கள்'' என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தார்.*

*🛡️இதையடுத்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தற்போது அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வனிடம், ஆசிரியர்களின் உயர் கல்வி படிப்பு குறித்த பிரச்னைகளை எடுத்துச்சொல்லி விளக்கம் கேட்டோம்...*

*🛡️''பொதுவாக 'அரசுத்துறையில் பணிபுரிகிற அனைவரின் செயல்பாடுகளும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு அரசுக்குத் தெரியப்படுத்தித்தான் நடைபெற வேண்டும்' என்பது வழக்கமான நடைமுறைதான். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிநாடு செல்கிறார் என்றால், அவர் மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளரிடமும் மத்திய உள்துறை அமைச்சகத்திலும் அனுமதி வாங்கியாக வேண்டும். ஆக இந்த அனுமதி என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல... அனைத்து அரசுப் பணியாளர்களுக்குமே பொதுவான ஓர் அம்சம்தான்.*

*🛡️இந்த வகையில், அரசு ஊழியராகப் பணிபுரிகிற ஆசிரியர்கள் உயர் கல்வி கற்கிறார்கள் என்றால், அதனால் அவர்களது பணியில் எந்தவித சுணக்கமோ, தடையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு இருக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் எந்த வழியில் உயர் கல்வியைப் பெறுகிறார்கள், மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்களா அல்லது தபால்வழியில் பயில்கிறார்களா என்றெல்லாம் தெரிந்துகொண்டு ஓர் ஒழுங்கை ஏற்படுத்துவதற்கான கட்டுப்பாடாகத்தான் இது பின்பற்றப்பட்டு வருகிறது.*

*🛡️எனவே, உயர் கல்வி படித்தாலும் சரி; அல்லது வெளிநாடு செல்வது, வேறு பணிகளில் ஈடுபடுவது என எந்தவொரு செயல்பாட்டை மேற்கொண்டாலும் சரி... ஆசிரியர்களும் அனுமதி பெற்றே செய்ய வேண்டும். மற்றபடி ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை யாரும் எதிர்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.*

*🛡️இதைவிடுத்து, 'தி.மு.க ஆசிரியர்கள்; கம்யூனிஸ்ட் ஆசிரியர்கள்' என்றெல்லாம் எந்தவித பாகுபாடும் பார்க்கப்படுவது இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்கள்தான். மாறாக அவரவர்கள் சங்கம் ஆரம்பித்துக்கொண்டு குறிப்பிட்ட கட்சிகளின் அபிமானிகளாக இருந்தால், அதுபற்றி நான் எந்தவித கருத்தும் சொல்ல முடியாது.*

*🛡️இதுபோன்று உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஏற்கெனவே, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று ஆசிரியர் சங்கத்தினர் சொல்கிறார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை மீண்டும் ஒருமுறை சோதித்து உறுதிப்படுத்தி, தன்னிடமுள்ள தகவல்களை சரிப்படுத்துவதற்காகக்கூட இதுபோன்று கேட்கப்பட்டிருக்கலாம். மற்றபடி, மக்களிடையே ஆசிரியர்களுக்கு கெட்டப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதெல்லாம் தவறான கருத்து!'' என்றார் விளக்கமாக.*

*🙏நன்றி🙏*
*_விகடன்_*

Wednesday, 29 July 2020

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான - ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி - ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்க முடிவு*

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான - ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி - ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்க முடிவு*

*⚔️*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 28.07.2020 அன்று மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் வரவேற்புரையாற்றினார்.*

*⚔️*
*🛡கூட்டத்தில் சங்கச் செயல்பாடுகள் தொடர்பாகவும், தீர்மானங்களை முன்மொழிந்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கிப் பேசினார்.*

*⚔️*
*🛡மேலும், கூட்டத்தில் 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் மற்றும் 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. P.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும். கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தணிந்தவுடன் மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 05.08.2020 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவில் ஊதிய அட்டவணையில் PAY Level – 10ல் Cell-40 உடன் முடிவடைவதால் வருடாந்திர ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைச் சரி செய்திட வேண்டும்.*

*⚔️*
*🛡தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயின்றதற்கு அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் பின்னேற்பு அனுமதி ஆணை உடனடியாக வழங்கிட வேண்டும்.*

*⚔️*
*🛡தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.*

*⚔️*
*🛡பள்ளிகளில் சத்துணவு உன்னும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதை விடுத்து சூடான, சுவையான, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களைச் சமைத்து வழங்கிட வேண்டும்.*

*⚔️*
*🛡கொரோனா பேரிடர் காலத்திலும் தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.*

*⚔️*
*🛡புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசாணை எண்: 280 நாள்: 24.06.2020 ன் படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க மறுத்து வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

*⚔️*
*🛡இன்றைய கொரோனா பொது முடக்கச் சூழலில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகைக் குறைவு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறைவு ஆகியவற்றின் காரணமாக IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் நடைமுறைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*⚔️*
*🛡இறுதியில் மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு நன்றி கூறினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*

சென்னை.
29.07.2020.

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Wednesday, 22 July 2020

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான / ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி / ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் / இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.*

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான / ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி / ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் / இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.*

*⚔️*
*🛡️ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.*

*⚔️*
*🛡️இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 21.07.2020 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத்தலைவர் K.ராஜேந்திரன், அகில இந்தியச் செயலாளர் K.P.O.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் S.சேது செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்தல் மற்றும் மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட்          ஆகியோர் மீது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡️கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 4 மாதகாலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 1½ கோடி மாணவர்களின் கல்வி நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி நோய்த்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்தவுடன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.*

*⚔️*
*🛡️மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பாக 05.08.2020 அன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 'கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்" நடத்திட முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡️மேலும் கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 % இட ஒதுக்கீட்டை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உடனடியாக வழங்கிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட வேண்டும் எனவும், தமிழகத்தில் தொலைக்காட்சி வழியே ஒளி பரப்பப்படும் 2 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை அனைத்துப் பகுதி மாணவர்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில் எளிதில் தெரியும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*⚔️*
*🛡️மேலும் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ந்து ஈடுபடுத்தும் போக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான,*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*

*_தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்,_*

*_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,_*

*_தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கம்,_*

*_தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,_*

*_தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்_*

*ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.*

*⚔️*
*🛡️இறுதியில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் நன்றி கூறினார்.*
                                   
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Wednesday, 8 July 2020

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்*

*🚆🏔12ம் வகுப்பு கடைசி தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு தேதி குறித்து இன்று மாலைக்குள் முதல்வர் அறிவிப்பார்*

*34482 மாணவா்கள் கடைசி தோ்வு எழுதவில்லை; அதில் 718 பேர் மட்டுமே தோ்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்; இவர்களுக்கு தேர்வு முடிந்த பின் தேர்வு முடிவு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்*

Saturday, 4 July 2020

*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! - ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! - கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! - கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! - ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! - கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! - கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண்:11/2020 நாள்:04.07. 2020._*

*⚔️*
*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது தொடர்பாக கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.*

_இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் 16.03.2020 முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும் (விடுபட்ட பாடங்கள்) நடத்த இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.*

*மேற்கண்டவாறு பொதுத்தேர்வுகளை நடத்த இயலாத சூழலில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவது தொடர்பாக அரசாணை எண்: 54 பள்ளிக்கல்வித்துறை நாள்: 09.06.2020 வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையிலும் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிட ஆணையிடப்பட்டது.*

*⚔️*
*🛡️அவ்வாறு கணக்கிடும்போது அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பாதிப்புக்கள், மதிப்பெண் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றை கல்வித்துறைக்குத் தெரிவிக்கும் வகையிலும் அதற்கான மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்து தனது சங்கத்தின் கருத்துக்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் அவர்கள் ஊடகங்கள் வழியே வெளியிட்டார்.*

*⚔️*
*🛡️மதிப்பெண்கள் வழங்கும் விவகாரத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் குறித்து தனது சங்கத்தின் கருத்துக்களை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட் ஊடகங்கள் வழியே தெரிவித்தார்.*

*⚔️*
*🛡️மேற்கண்டவாறு தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு, மாணவர்கள் நலன் கருதி ஆலோசனைகள் வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறான, ஆசிரியர் சங்கத் தலைவர்களை அச்சறுத்துகின்ற நடவடிக்கையாகும்.*

*⚔️*
*🛡️ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசாணையின் மீது கருத்துத் தெரிவிப்பதற்குக் கூட ஆசிரியர் இயக்கங்களுக்கு உரிமை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை கருதுவது அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்.*

*⚔️*
*🛡️ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தமிழ்நாட்டின் கல்வி நலன் கருதி வெளியிடும் கருத்துக்களை விமர்சனமாக நோக்காமல், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக பள்ளிக்கல்வித்துறை கருத வேண்டும்.*

*⚔️*
*🛡️ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை என்பது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியிலும், ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது மேற்கொண்டுள்ள 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Friday, 3 July 2020

*🛡️கருத்துரிமையைப் பறிக்கும் செயல் / ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை / பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் / இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.*

*🛡️கருத்துரிமையைப் பறிக்கும் செயல் / ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை / பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் / இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.*
    
*⚔️*
*🛡️ _கருத்துரிமையைப் பறிக்கும் செயல் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான ஒழுங்கு      நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்  பெற வேண்டும்  இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்._*

*⚔️*
*🛡️இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 02.07.2020 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத் தலைவர் மு.ராஜேந்திரன், அகில இந்தியச் செயலாளர் மு.P.ழு.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்: 54 பள்ளிக்கல்வித்துறை நாள்: 09.06.2020 ஐ விமர்சித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு.மா.ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமாகிய  P.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) ன் கீழான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*

*⚔️*
*🛡️பள்ளிக்கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத்தலைவர்கள் அரசாணை எண்: 54 ன் மீது தங்களது சங்கத்தின் கருத்துக்களைத் தெரிவித்ததை பள்ளிக்கல்வித்துறை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக எடுத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் 17(ஆ) நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡️இப்பிரச்சனையில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையைப் பொறுத்து 20.07.2020 அன்று நடைபெறவுள்ள அடுத்த மாநிலக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡️மேலும், கொரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளிகள் திறப்புத் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்கவேண்டும். 11 ஆம் வகுப்பில் பழைய பாடத்திட்ட நடைமுறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*⚔️*
*🛡️இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்  P.பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யு.சங்கர், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீரமேஷ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் உதய சூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் உட்பட 9 ஆசிரியர் இயக்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.*