Friday 31 July 2020

*பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன? - விகடன் கட்டுரை*

*பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன? - விகடன் கட்டுரை*

*🛡️'பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' என்ற செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு மீது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருகிறது.*

*🛡️இந்த நிலையில், ''ஆசிரியர்கள் உயர் கல்வி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை'' என்கிறார் வைகைச் செல்வன்.*

*🛡️'உரிய அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' என்ற தொடக்கக் கல்வித்துறையின் அறிவிப்பு, அதிர வைத்திருக்கிறது. 'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான்யனின் மனதில் அலையடிக்கின்றன.*

*🛡️தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன. உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த பிறகு மேற்படிப்பில் பட்டம் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். முறையாக முன் அனுமதி பெற்று பட்டம் வாங்கிய ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான ஊக்க ஊதியமும் அவர்களது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இப்படியான அனுமதி பெறாமல், பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கே தற்போது தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*_🛡️இதுகுறித்துப் பேசுகிற 'தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி'யின் பொதுச் செயலாளர் ச.மயில், ''தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி படிப்பதற்குத் துறை சார்ந்து அனுமதி பெற வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்தான் இந்த முன் அனுமதியை வழங்குவார்._*

*_🛡️இந்த விதிமுறையை அறிந்திடாத சிலர், பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு பின்னர் அனுமதி கோரியிருக்கிறார்கள். இன்னும் சிலர் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்த அதே கையோடு, உயர் கல்வி கற்பதற்கான அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கும் முறையாக விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால், படித்து முடித்து பட்டமும் வாங்கிவிட்ட பின்னரும்கூட, துறை சார்ந்த அனுமதி கிடைக்கப் பெறாதவர்களும் உண்டு. இப்படி பல்வேறு காரணங்களாலும் முன் அனுமதி பெறாதவர்கள் எண்ணிக்கை தமிழ்நாடு முழுக்கவே குறைந்தது 5,000 ஆசிரியர்களாவது இருக்கும்._*

*_🛡️இவர்களுக்குப் 'பின்னேற்பு ஒப்புதல்' என்ற அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் அனுமதி கொடுத்துவந்ததும் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திடீரென பின்னேற்பு ஒப்புதலையும் நிறுத்திவிட்டனர். இது விஷயமாக ஆசிரியர் சங்கங்களும் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 'பின்னேற்பு ஒப்புதல்' வழங்கக்கோரி கேட்டுவந்தோம்._*

*_🛡️ஓர் ஆசிரியர் படிப்பது என்பது நல்ல விஷயம்தானே... ஆனால், அதையேகூட அரசாங்கம் குற்றமாகப் பார்த்துத் தண்டனை கொடுத்தால் அதை என்னவென்று சொல்வது? அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இப்போதோ உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்'' என்கிறார் வேதனையோடு._*

*🛡️இந்த நிலையில், மூத்த ஆசிரியரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவருமான முத்துசாமி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''இது புது பிரச்னை அல்ல... ஏற்கெனவே கடந்த 3 வருடங்களுக்கு முன்பே 'அனுமதி பெறாமல் எப்படிப் படிக்கலாம்... எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சொல்லி, அப்போதைய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார்.*

*🛡️உடனே ஆசிரியர் சங்கத்தினர் அனைவரும் துறை ரீதியாக உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். முடிவில், இந்த ஒருமுறை மட்டும் சிறப்பு அனுமதியாக 'பின்னேற்பு அனுமதி கொடுக்கிறோம்' என்று ஒப்புதல் கொடுத்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் 'பின்னேற்பு ஒப்புதல் வழங்கக்கோரும் விளக்கக் கடிதம்' பெற்று அதைப் பள்ளிக் கல்வித்துறையிடமும் சமர்ப்பித்திருந்தோம்.*

*🛡️இதில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பின்னேற்பு ஒப்புதல் கடிதம் கொடுத்தது பள்ளிக் கல்வித்துறை. ஏனைய ஆசிரியர்களுக்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் சொல்லாமலேயே விட்டுவிட்டது. இதுகுறித்து நாங்களும் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். இந்த வருட ஆரம்பத்தில்கூட இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.*

*🛡️பொதுவாக, இதுபோன்று முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கண்டனம் தெரிவிப்பார்கள்; அல்லது எச்சரிப்பார்கள். இதில், எச்சரித்து விடப்பட்ட ஆசிரியர்களுக்கான தண்டனை என்பது, அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களது பதவி உயர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதேபோல், கண்டனம் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வரையிலும் எந்தவித பதவி உயர்வும் அளிக்கப்பட மாட்டாது.*

*🛡️இந்தக் கண்டனம், எச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆசிரியரது தகுதியையும் பொறுத்து மாறுபடும். இப்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் தண்டனை வழங்கப்பட்டு, 'இனிமேல் இதுபோன்ற தவற்றைச் செய்ய மாட்டேன்' என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அளித்த கடிதங்களும் தலைமைச் செயலகத்துக்கு 2018-லேயே கொடுக்கப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நடந்துமுடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போது புதிதாக மறுபடியும் முதலிலிருந்து இந்தப் பிரச்னையை ஏன் கிளப்பியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.*

*🛡️கரூர், முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்துதான் இப்போது புதிதாகக் கடிதம் வெளியாகியுள்ளது. அதில், தொடக்கக் கல்வித் துறையில், முன் அனுமதி பெறாமல் படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.*

*🛡️2012-ம் ஆண்டுக்குப் பின்பு இதுபோல், முன் அனுமதி பெறாமல் பட்டம் பயின்றவர்கள் யாருமே கிடையாது. இந்தப் பிரச்னைகள் எல்லாமே 2012-க்கு முன்பாக உயர் கல்வி படித்தவர்கள் பற்றியதுதான். அதாவது, அனுமதி பெறாமல், பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை என்பது தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 2,000 பேர், பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 3,000 பேர் என தமிழ்நாடு முழுக்க 5,000 பேர் வரையிலும் இருப்பார்கள்... அவ்வளவுதான். இவர்கள் மீதும்கூட ஏற்கெனவே துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, விளக்கக் கடிதம் கேட்டுப் பெற்றுவிட்ட பிறகு, மறுபடியும் ஏன் இப்போது புதிதாக பிரச்னையைக் கிளப்புகிறார்கள் என்றே தெரியவில்லை...'' என்றார் குழப்பத்துடன்.*

*🛡️இதற்கிடையில், பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிற முக்கியப் புள்ளிகள் சிலர், ''பொதுவாக ஆசிரியர்கள் என்றாலே, தி.மு.க அரசுக்கு ஆதரவானவர்கள் என்ற மனவோட்டம் அ.தி.மு.க அரசுக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் எங்கள் உரிமைகள் ஒவ்வொன்றையும்கூட இந்த அரசில் கேட்டுப் பெறும் நிலையில்தான் வைத்திருப்பார்கள்.*

*🛡️அதனால்தான் ஊதிய உயர்வு, விடுப்பு என எங்களுக்கு உரிய உரிமைகளுக்காக நாங்கள் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நியாயமாக எங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளைக்கூட, 'அரசே தாராள மனதோடு ஆசிரியர்களுக்கு உதவுவது போன்று' விளம்பரம் செய்து ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அளிப்பதுதான் அ.தி.மு.க அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடு.*

*🛡️ஒட்டுமொத்தத்தில், பொதுமக்கள் மத்தியில், 'ஆசிரியர்கள் என்றாலே தகுதிக்கு மீறி அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள், அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்துபவர்கள்' என்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்'' என்று குமுறுகின்றனர்.*

*🛡️ஆசிரியர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் கேட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். நமது செல்பேசி அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து குறுஞ்செய்தி அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை.*

*🛡️பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் மின்னஞ்சல் முகவரிக்கும் நமது கேள்விகளை அனுப்பி வைத்தோம். பதில் வராததைத் தொடர்ந்து அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் பெறுவதற்காக அவரது உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''அமைச்சர் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கிறார்'' என்ற பதில் கிடைத்தது.*

*🛡️இதையடுத்து, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தோம். ''இன்றைய தினம் முதல்வரோடு கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கிறது. நாளை ஈரோட்டில் உள்ள விருந்தினர் விடுதிக்கு வந்துவிடுங்கள்'' என்றார் அமைச்சர். ஆனால், மறுநாள் ஈரோடு விருந்தினர் இல்லத்துக்கு வராத அமைச்சர் செங்கோட்டையன், கதிரம்பட்டியில் நடைபெற்ற 'இலவச கோழி வழங்கும் நிகழ்ச்சி'யில் கலந்துகொண்டார். அங்கேயும் நேரில் சென்று அமைச்சரின் விளக்கம் பெறக் கேட்டு நின்றோம். ''தொடர்ச்சியாகப் பணிகள் இருக்கின்றன. எனவே, மாலை வீட்டுக்கே வந்துவிடுங்கள்'' என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தார்.*

*🛡️இதையடுத்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தற்போது அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வனிடம், ஆசிரியர்களின் உயர் கல்வி படிப்பு குறித்த பிரச்னைகளை எடுத்துச்சொல்லி விளக்கம் கேட்டோம்...*

*🛡️''பொதுவாக 'அரசுத்துறையில் பணிபுரிகிற அனைவரின் செயல்பாடுகளும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு அரசுக்குத் தெரியப்படுத்தித்தான் நடைபெற வேண்டும்' என்பது வழக்கமான நடைமுறைதான். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிநாடு செல்கிறார் என்றால், அவர் மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளரிடமும் மத்திய உள்துறை அமைச்சகத்திலும் அனுமதி வாங்கியாக வேண்டும். ஆக இந்த அனுமதி என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல... அனைத்து அரசுப் பணியாளர்களுக்குமே பொதுவான ஓர் அம்சம்தான்.*

*🛡️இந்த வகையில், அரசு ஊழியராகப் பணிபுரிகிற ஆசிரியர்கள் உயர் கல்வி கற்கிறார்கள் என்றால், அதனால் அவர்களது பணியில் எந்தவித சுணக்கமோ, தடையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு இருக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் எந்த வழியில் உயர் கல்வியைப் பெறுகிறார்கள், மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்களா அல்லது தபால்வழியில் பயில்கிறார்களா என்றெல்லாம் தெரிந்துகொண்டு ஓர் ஒழுங்கை ஏற்படுத்துவதற்கான கட்டுப்பாடாகத்தான் இது பின்பற்றப்பட்டு வருகிறது.*

*🛡️எனவே, உயர் கல்வி படித்தாலும் சரி; அல்லது வெளிநாடு செல்வது, வேறு பணிகளில் ஈடுபடுவது என எந்தவொரு செயல்பாட்டை மேற்கொண்டாலும் சரி... ஆசிரியர்களும் அனுமதி பெற்றே செய்ய வேண்டும். மற்றபடி ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை யாரும் எதிர்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.*

*🛡️இதைவிடுத்து, 'தி.மு.க ஆசிரியர்கள்; கம்யூனிஸ்ட் ஆசிரியர்கள்' என்றெல்லாம் எந்தவித பாகுபாடும் பார்க்கப்படுவது இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்கள்தான். மாறாக அவரவர்கள் சங்கம் ஆரம்பித்துக்கொண்டு குறிப்பிட்ட கட்சிகளின் அபிமானிகளாக இருந்தால், அதுபற்றி நான் எந்தவித கருத்தும் சொல்ல முடியாது.*

*🛡️இதுபோன்று உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஏற்கெனவே, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று ஆசிரியர் சங்கத்தினர் சொல்கிறார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை மீண்டும் ஒருமுறை சோதித்து உறுதிப்படுத்தி, தன்னிடமுள்ள தகவல்களை சரிப்படுத்துவதற்காகக்கூட இதுபோன்று கேட்கப்பட்டிருக்கலாம். மற்றபடி, மக்களிடையே ஆசிரியர்களுக்கு கெட்டப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதெல்லாம் தவறான கருத்து!'' என்றார் விளக்கமாக.*

*🙏நன்றி🙏*
*_விகடன்_*

No comments: