Wednesday, 4 November 2020

*🛡️கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் - ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*

*🛡️கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் - ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 17/2020  நாள்: 04.11.2020_

*_கற்போம் எழுதுவோம் இயக்கம் வெற்றி பெற அதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்! பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் கல்விப் பணி பாதிக்கப்படும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._*

*✍️*
*🛡️பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணை ந.க.எண்: 743/அ3/2020 நாள்: 28.10.2020 ல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 'கற்போம் எழுதுவோம்" என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*✍️*
*🛡️மேலும், அவ்வாணைவில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கையையும், எழுத்தறிவற்ற 20 நபர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் தேர்வு செய்து 04.11.2020 அன்று நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.*

*✍️*
*🛡️எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் இத்திட்டத்தை நிறைவேற்ற தேவையான களப்பணியாளர்களையும், கற்பித்தல் பணிக்கு தகுதியான ஆசிரியர்களையும் தனியாக நியமித்திட வேண்டும். அதை விடுத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவது என்பது அவர்களது அன்றாட நடைமுறைப் பணியான கற்பித்தல் பணியைப் பெரிதும் பாதிப்பதாக அமைந்துவிடும். இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொண்டு வருகிறது.*

*✍️*
*🛡️கடந்த காலங்களில் இதுபோன்ற வயது வந்தோர் கல்வித் திட்டங்களான முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், கற்கும் பாரதம் போன்ற திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட போது அதற்கெனத் தனியாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிலர் மட்டும் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இப்பணிக்கென நியமித்து ஊதியம் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் 60:40 நிதிப்பங்களிப்பை இதற்காகப் பயன்படுத்த வேண்டும்.*

*🛡️மேலும், இத்திட்டம் தொடர்பாக பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் செயல்முறை ஆணையில் இல்லாத பல விதிமுறைகளை பல்வேறு மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி அச்சுறுத்தி வருகின்றனர்.*

⚡'கற்போம் எழுதுவோம்" மையத்தை பள்ளிகளில் அமைத்திட வேண்டும்.

⚡பள்ளி வேலை நாட்களில் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்.

⚡தன்னார்வலர்களுக்கு ஊதியம் கிடையாது. தன்னார்வலர்கள் கிடைக்காவிட்டால் ஆசிரியர்களே பாடம் கற்பிக்க வேண்டும்.

⚡23.11.2020 அன்று வகுப்புக்கள் தொடங்கப்பட வேண்டும்.

⚡கற்போர் மையத்திற்கு வரவில்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கற்பிக்க வேண்டும்.

⚡கற்போருக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை வாட்சப் குழுக்கள் வழியே தெரிவித்து வருகின்றனர்.*

*✍️*
*🛡️தற்போது தமிழக அரசு 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 16.11.2020 முதல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில் முதியோர் கல்வி மையத்தை பள்ளிகளில் அமைப்பது என்பதும், பள்ளி வேலை நாட்களில் இரண்டு மணி நேரம் முதியோர் கல்வி மையம் இயங்கும் என்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களைக் கொண்டு மையம் அமைக்கப்படும் என வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது குறைந்தது 15 வயது முதல் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக எத்தனை வயது வரை மையத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.*

*✍️*
*🛡️மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களில் 95% க்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு உணவுக்கே வழி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகை தந்து இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்திய மற்றதாக உள்ளது. எனவே, தமிழக அரசு 'கற்போம் எழுதுவோம்" திட்டம் வெற்றி பெற இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்களைப் இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
                                                 _🗣️இப்படிக்கு,_
                                        
சென்னை     *_ச. மயில்,_*       _பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: