*✍️கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் நிலையைத் தவிர்த்திட வேண்டுதல் சார்பாக தமிழக முதல்வருக்கு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.*
*தஆஆகூ/மாஅ/கடித எண்: 33/2021, நாள்: 25.05.2021*
*_பெறுநர்_*
*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்*
*தலைமைச் செயலகம்*
*சென்னை - 9.*
*_மாண்புமிகு ஐயா,_*
_பொருள்: கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் நிலையைத் தவிர்த்திட வேண்டுதல் - விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுதல் சார்பாக._
*✍️கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கப் புதிதாகப் பொறுப்பேற்ற தங்கள் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இமைப்பொழுதும் சோராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தாங்களும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், உயர் அலுவலர்களும் தமிழகம் முழுவதும் இடையறாது பணியாற்றிக் கொண்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. அதேபோன்று இந்நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலநூறு பேர் இப்பணியின் காரணமாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இலட்சக்கணக்கான பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.*
*✍️அதேபோன்று கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் மட்டும் தமிழகம் முழுதும் பணியில் இருந்த ஆசிரியர்கள் சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆசிரியர்களின் குடும்பங்களிலும் பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பணியமர்த்தி ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இரண்டு மாவட்டங்களின் கல்வித்துறை அலுவலர்களும் ஆசிரியர்களுக்கு தனித்தனியே உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.*
*✍️அதன்படி 500 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்றைக் கண்டறியும் களப்பணியில் ஈடுபட்டு, அதன் விவரத்தை மேல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். இச்செய்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அப்பணி ஆசிரியர்கள் செய்யத் தகுந்த பணியாக இருக்க வேண்டும். மேலும், இது பெருந்தொற்றுநோய் சார்ந்த பணி என்பதால் தகுதி வாய்ந்த விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் இப்பணியில் ஈடுபடுத்துவது தான் சரியானதாக இருக்கும்.*
*✍️ஏனெனில், இது போன்ற மருத்துவம் சார்ந்த முன்களப் பணிகளில் முற்றிலும் அனுபவமில்லாத ஆசிரியர்களை எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் ஈடுபட உத்தரவிடுவது என்பது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகும். மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட இணை நோய்களுக்குத் தொடர் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கும் இப்பணிகள் வழங்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.*
*✍️மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 24.05.2021 செய்தியாளர்கள் சந்திப்பில், "கொரோனா நோய்த்தொற்றுப் பணிகளில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் கூட இப்பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (25.05.2021) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.*
*✍️எனவே, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் உத்தரவுகளை ரத்து செய்திடவும், விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டும் கொரோனா நோய் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் உத்தரவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.*
சென்னை
25.05.2021
_✍️தங்கள் உண்மையுள்ள,_
*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
நகல்:
1. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 9
2. மதிப்புமிகு. தலைமைச் செயலாளர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை - 9.