*🛡️பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் / உடனடியாக திரும்பப் பெற வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*
*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 06/2021 நாள்: 18.05.2021_*
*⚔️*
*🛡️பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை ஒழித்து, அதை ஆணையர் பணியிடமாக்கி, அதில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நியமனம் செய்துள்ளதை தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி கருதி தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔️*
*🛡️1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் முறையான பொதுக்கல்வியை மக்களுக்கு வழங்குவதற்காக சென்னையில் பொதுக்கல்வி இயக்ககம் (Directorate of Public Instruction) உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட பொதுக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று பெயர் பெற்றது. அது இன்றளவும் அப்பெயராலேயே வழங்கப்படுகிறது. பொதுக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர்களாக ஆங்கிலேயர்கள் உட்பட பலர் பொறுப்பு வகித்துள்ளார்கள். 1954 இல் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தான் பொதுக்கல்வி இயக்ககம் என்பது பள்ளிக்கல்வி இயக்ககம் (Directorate of School Education) எனப் பெயர் மாற்றம் பெற்றது. முதல் பள்ளிக்கல்வி இயக்குநராகப் புகழ்பெற்ற கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பொறுப்பேற்றார்.*
*⚔️*
*🛡️அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு இயக்குநர்கள் பதவி வகித்துள்ளனர். மேற்கண்டவாறு இயக்குநர்களாகப் பதவி வகித்தவர்களில் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று உச்சபட்சமாக இயக்குநர் பதவியைப் பெற்றுள்ளார்கள். சமீபகாலமாக இயக்குநர் பதவிக்கு வருபவர்கள் நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி இயக்குநர் பதவிக்கு வந்தவர்கள். இவ்வாறு பதவி உயர்வின் மூலம் இயக்குநர்களாக வருபவர்கள் பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களையும் அனுபவப்பூர்வமாக அறிந்தவர்களாகவும், நீண்ட கள அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளனர். அதுவே மாநிலத்தின் மிகப்பெரிய துறையான பள்ளிக்கல்வித்துறைக்கு பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது.*
*⚔️*
*🛡️இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு, பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தேசிய கல்விக் கொள்கையைப் புறக்கணிப்போம் என்பன உள்ளிட்ட தமிழ்நாட்டின் கல்வி நலன் சார்ந்த செயல்பாடுகளை துணிச்சலுடன் மேற்கொண்டு பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இச்சூழலில் தமிழக அரசு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஆணையர் பணியிடமாக மாற்றி இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை திடீரென நியமித்திருப்பது என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.*
*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் நலன் கருதி பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் மீண்டும் பழைய நிலையில் அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் தேவையின்றி உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்திட வேண்டும். அதேபோன்று கடந்த ஆட்சியில் தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர் இயக்கங்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில் 1994 முதல் தொடக்கக்கல்வி துறையை நிர்வகிக்க தனியாக தொடக்கக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த ஆட்சியில் அப்பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. அப்பணியிடங்களை மீண்டும் உருவாக்கி தொடக்கக்கல்வி இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கக் கல்வியைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் முன்புபோல் தொடக்கக்கல்வித்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் தனித்தனி நிர்வாக அமைப்புகளாகச் செயல்பட தமிழக அரசு ஆவண செய்திட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி ஆகிய இரண்டும் சிறப்பானதொரு வளர்ச்சியைப்பெறும். அந்த நிலையை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
No comments:
Post a Comment