*🏠கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருகிறது எனவே விழிப்போடு இருப்போம் வீட்டிலேயே இருப்போம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் விழிப்புணர்வு கடிதம்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:19.05.2021*
*காட்டுத்தீ போல்
----------------------------
பரவும் கொரோனா!*
---------------------------------
உயிரிழப்புகளைத்
---------------------------------
தடுக்க விழிப்புடன்
---------------------------------
செயல்படுவோம்!*
----------------------------------
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்._*
*🏠கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை சுனாமியைப் போல் இந்தியாவைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அது காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. மருத்துவ அவசர நிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது.*
*🏠நம்முடைய வாழ்நாளில் நாம் சந்தித்திராத ஒரு
சூழலைத் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா, இங்கிலாந்து,இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், பாதிப்புக்களைத் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து நாம் பரிதாபப்பட்டோம். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் நம் இந்திய தேசத்தைப் பார்த்து உலக நாடுகளெல்லாம் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது உலகிலேயே கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ள நாடாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது.*
*🏠உலக நாடுகள் இதில் இருந்து மீண்டதற்கு மிக முக்கியக் காரணம், அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தான். அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள் தனது மக்கள் தொகையில் 90% பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி விட்டன.நம் நாட்டில் 20% பேர் கூட இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை.எனவே,கொரோனாவை விரட்டும் பேராயுதமாக தடுப்பூசியே விளங்குகிறது.எனவே, நம் இயக்கத் தோழர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தவறாது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமானதாகும்.இதில் இனியும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.*
*🏠தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கும் தொடர் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நம் இயக்கத் தோழர்கள், நம்மோடு இயக்கப் பணியாற்றியவர்கள், நம்மோடு பணியாற்றியவர்கள், உறவினர்கள் நண்பர்கள்,நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் எனப் பலரது இழப்பு என்பது நம்மால் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது.நாள்தோறும் Whatsap,face book போன்ற சமூக வலைதளங்களைத் திறந்தால் கண்ணீர் அஞ்சலி செய்திகள் அணிவகுத்து வருவது நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போடுவதாக உள்ளது.சமூக வலைதளங்களைத் திறப்பதற்கே அச்சமாக உள்ளது.*
*🏠எனவே,நம் இயக்கத் தோழர்கள் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.வெளி இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது, எப்போதும் முகக் கவசம் அணிவது,சானிடைசர் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவது,சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளைத் தவறாது கடைப் பிடிக்க வேண்டும். நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்கள் உரிய மருந்துகளைத் தவறாமல் எடுத்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.*
*🏠அதையும் மீறி கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதைத்தான் மருத்துவர்கள் மிக அழுத்தமாக வலியுறுத்துகின்றனர். நாளாக நாளாக உடலில் நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்தே உயிரிழப்புகள் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.*
*🏠ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பட்டவர்கள் கோவிட் பாதுகாப்பு மையங்களிலேயே சிகிச்சை பெற்று எவ்வித பாதிப்புமின்றி சாதாரணமாக நலமடைந்து வருவதைப் பார்க்கிறோம்.எனவே, நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் செய்யும் தாமதமும், தயக்கமுமே விபரீத நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் உணர வேண்டும். மேலும்,நோய்த்தொற்று உறுதியானால் அச்சப்படத் தேவையில்லை.சிலர் மனதளவில் மிகவும் பயம் கொள்கின்றனர். "பயமே பாதி நோயைக் கொண்டு வந்துவிடும்; தைரியம் பாதி நோயைக் குணப்படுத்தி விடும்"என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா நோய்த்தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.இதில் கூச்சப்படவோ அல்லது அச்சப்படவோ தேவையில்லை.எனவே துணிச்சலுடன் நோயை எதிர்கொள்வதும்,நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே பரிசோதனை செய்வதும் மிக மிக முக்கியமானது என்பதை நம் இயக்கத் தோழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினர்களுக்கும், இயக்க உறுப்பினர்களுக்கும், நம் அருகில் வசிப்பவர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை நாம் ஊட்ட வேண்டும்.*
*🏠இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில்,அபாய கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது என்பது படித்த வர்க்கமாகிய ஆசிரியப் பெருமக்களின் தலையாய கடமையாகும்.இந்தக் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து மருத்துவர்களும், செவிலியர்களும்,முன் களப்பணியாளர்களும், காவல்துறையினரும், சுகாதாரத் துறை யினரும் உயிரைக் கொடுத்து 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பணியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.இருக்கின்ற வசதிகளைக் கொண்டு அவர்கள் ஆற்றும் சேவை என்பது மகத்தானது.*
*🏠நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசும் மிகச்சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. உயிர்காக்கும் ஆக்சிஜன்,ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகளைப் பெறுவதில் தமிழக அரசு துரிதமாகச் செயலாற்றி வருகிறது. நோயைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,உயர் அலுவலர்கள் இரவு பகலாகக் கண் துஞ்சாது பணியாற்றி வருகின்றனர்.ஆனால், மத்திய அரசு நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்க எதிர்பார்த்த உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதாக தெரியவில்லை. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு எப்பாடுபட்டேனும் ஆக்சிஜன் அளிப்பது மத்திய அரசின் கடமை. அதை எந்த நாட்டிலிருந்தேனும் இறக்குமதி செய்து அளிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்குரியது. ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நோயாளி இறப்பது என்பது இந்த தேசத்தின் மிகப் பெரிய அவமானம்.*
*🏠கடந்தாண்டு கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு நம் இயக்கத் தோழர்கள் செய்த உதவி மகத்தானது.அப்போது தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்களை நம் இயக்கத் தோழர்கள் வழங்கினார்கள். இவ்வாண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டவுடன் நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் ஒருநாள் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.*
*🏠இவ்வாண்டு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு கடந்த ஆண்டை விட பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நோய்த் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.பொது மக்களில் பெரும்பாலோர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.நம் இயக்கத் தோழர்கள் துன்பத்தில் உழலும் மக்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கலாம்.நம் அருகில் வசிப்பவர்களில் மிகவும் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து உதவலாம். நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வகையில் உதவிப் பணிகளை ஆற்றுவது மிகவும் முக்கியமானது.*
*🏠எனவே,கண்ணுக்குத் தெரியாத,உலகம் இதுவரை சந்தித்திராத கொடுந்தொற்றான கொரோனாவின் பாதிப்பிலிருந்து நம்மையும்,நம் குடும்பத்தாரையும், உறவினர்களையும், நண்பர்களையும், அருகில் வசிப்பவர்களையும்,நம்மிடம் பயிலும் மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் நம் இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.தொற்றால் பாதிக்கப்படும் நம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு நம்மால் இயன்ற உதவிகளை இயன்ற வழிகளில் ஆற்றவேண்டும்.*
*_காலமறிந்து கடமை ஆற்றுவோம்!_*
*_சூழல் அறிந்து விழிப்போடு செயல்படுவோம்!_*
*_கொரோனா கொடுந்தொற்றிலிருந்து அனைவரையும் காப்போம்!_*
*🤝தோழமையுடன்;
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment