*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*🌟இந்திய தேசத்தின் 17வது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய தேசத்தின் குடிமக்கள் என்ற முறையில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியது தலையாய கடமையாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியா என்ற மாபெரும் தேசத்தை வழிநடத்தும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மகத்தான தேர்தல் இது.*
*🌟உலகிலேயே சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கப் போகும் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இதுதான். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு இதைவிட வேறு சான்று இருக்க முடியாது. வாக்களிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது தலையாய கடமையும் ஆகும். வாக்களிப்பதில் நாம் தவறு செய்தால் இந்த தேசத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாக அது அமைந்துவிடும்.*
*🌟எனவே, தேசத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் உகந்த, நம்முடைய நலனைப் பாதுகாக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும். வாக்கு என்பது சாதாரணமானது அல்ல. எனவே, நாம் அனைவரும் வாக்களிப்பதோடு நம் குடும்பம், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தவறாமல் வாக்களிக்கச் செய்திட வேண்டும்.*
*🌟தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் தேர்தல் பணிச்சான்று (EDC) வழங்குவதில் தமிழகம் முழுவதும் எழுந்துள்ள தேக்கநிலை ஆசிரியர்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. உரிமைப் போராட்டங்களில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் நம் பேரியக்கத் தோழர்கள் வாக்களிக்கும் உரிமைப் போராட்டத்திலும் முன்னணியில் நின்று 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும். நாம் வாக்களிப்பதோடு நம் இயக்க உறுப்பினர்கள், சக ஆசிரியர்கள் என அனைவரையும் வாக்களிக்கச் செய்வதில் கண்துஞ்சாது கடமையாற்ற வேண்டும். இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின் மாவட்டத் தேர்தல் அலுவலர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறையீடு செய்து உரிமையை நிலைநாட்ட வேண்டும்.*
*🌟ஆசிரியர்கள் அறிவார்ந்தவர்கள். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையும், வல்லமையும் கொண்டவர்கள்.*
*🌟எனவே, நல்லது எது? தீயது எது? என சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்பதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிட வேண்டும். நம் இந்திய தேசம் மதச்சார்பற்ற, பன்முகத்தன்மை கொண்ட தேசம். தேசத்தை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சீரழிக்க நினைப்பவர்களை அடையாளம் கண்டு, தேச நலனைப் பாதுகாப்பவர்கள் யார்? நம் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்பவர்கள் யார்? நம் நியாயமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்கள் யார்? நமக்கு தீங்கு செய்பவர்கள் யார்? நமக்கு நன்மை செய்பவர்கள் யார்? என்பதையெல்லாம் ஆய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டிய மிக முக்கியமான தேர்தல் இது.*
No comments:
Post a Comment