*🛡️50 ஆண்டுகளாகப் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.*
🛡️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 16/2020 நாள்: 17.10.2020
⚔️
🛡️50 ஆண்டுகளாகப் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை.
⚔️
🛡️தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் 50 ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை 10.03.2020 முதல் ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள்: 116 மற்றும் 37 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி 28.10.2020 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
⚔️
🛡️ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 1969 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களது ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு ஆசிரியர் தனது பணிக் காலத்தில் தான் பெற்ற உயர் கல்விக்காக அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளைக் கடந்த 50 ஆண்டுகாலமாகப் பெற்று வந்தனர்.
⚔️
🛡️"ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருக்க வேண்டும்; தங்களது அறிவை விரிவாக்கும் வகையில் தொடர்ந்து தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்;
⚔️
🛡️எரிகின்ற விளக்குத்தான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும்" என்ற அடிப்படையில் தான் தமிழகத்தின் கடந்த கால அரசுகள் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கி வந்தன.
⚔️
🛡️இந்நிலையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண்: 37, நாள்:10.03.2020 ல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10.03.2020 முதல் முன் ஊதிய உயர்வு (Advance increment) கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
⚔️
🛡️இவ்வாணையில் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive increment) பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே, இவ்வாணை ஆசிரியர்களுக்குப் பொருந்தாது என அனைவராலும் கருதப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்:15.10.2020இல் மேற்கண்ட அரசாணை எண்: 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பணியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
⚔️
🛡️ஆசிரியர்கள் உயர்கல்வித் தகுதி பெறுவது என்பது அவர்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குக் பயன்படக்கூடியது. ஆசிரியர்களின் கல்வி சார்ந்த அறிவை நாள்தோறும் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவக்கூடியது. அதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது நியாயமற்றது.
⚔️
🛡️சமீபகாலமாக ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகளைத் தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன் உச்சகட்டம் தான் 50 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிட்டுள்ள அரசாணை.
எனவே, அரசாணைகள்: 37, 116 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்துள்ளதை ரத்து செய்திட வேண்டும்.
⚔️
🛡️ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக 28.10.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் அடுத்து வரும் மாநில செயற்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
சென்னை
17.10.2020
_🤝தோழமையுடன்;_
*_ச. மயில்_* _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*