🌟 இன்று மாலை மிக முக்கியமான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்நிலையில் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பது போன்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் இன்று தோன்றக்கூடிய சந்திரன் சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள காரணத்தாலும், மேலும் சில காரணங்களாலும் சிறப்புவாய்ந்த சந்திர கிரகணம் என பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழிலநுட்ப மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*ஏன் இன்று தோன்றும் சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்தது?*
🌟 ''இன்று மாலை தோன்றவுள்ளது முழு சந்திர கிரகணம். இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ எந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.
🌟 வழக்கமான சந்திர கிரகணத்தை விட இன்று தோன்றவுள்ள சந்திர கிரகணத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. ஏனெனில் நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை புளூ மூன் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நீல நிலா என்பதும் வழக்கமானதே வானியல் அடிப்படையில் அதில் மிகச்சிறப்புகள் எதுவும் கிடையாது.
🌟 நீல நிலா என சொல்லப்படுவதால் பொதுமக்கள் சரியான புரிதலின்றி அன்றைய தினம் தோன்றக்கூடிய சந்திரன் நீல நிறத்தில் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் சந்திரன் வழக்கமான நிறத்திலேயே தோன்றுவதுதான் யதார்த்தம்.
🌟 நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதற்கு பிறகு 151 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்'' என்கிறார் சவுந்திரராஜ பெருமாள்.
🌟 சந்திர கிரகணம் குறித்து பேசியபோது, '' சூரியனைச் சுற்றி பூமி வருகிறது. பூமியை சுற்றுகிறது நிலா. இது அடிப்படை தகவல். சூரியன்- பூமி -நிலா ஆகியவை கிட்டத்தட்ட ஒரே கோட்டில் வரும்போது நிலாவை சூரியனிடமிருந்து ஏறத்தாழ மறைக்கும் விதமாக இடையில் புவி இருக்கும் தினத்தை பௌர்ணமி என்கிறோம்.
🌟 சமயங்களில் புவியின் நிழல் 14 லட்சம் கிலோ மீட்டருக்கு கூம்பு வடிவத்தில் நீளும். ஆகவே சூரிய வெளிச்சம் முழுமையாக நிலாவுக்கு கிடைக்காது. பெரும்பான்மையான சமயங்களில் புவியின் நிழலை தொடாமல் சில கோணங்கள் விலகி நிலவு சென்றுவிடும். ஏனெனில் நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால் நிழலை தொடாமல் நிலவு மேலேயே கீழேயோ சென்றுவிடும்.
🌟 புவியின் நிழலுக்குள் வந்து சூரியனின் நேரடி பார்வையில் இருந்து நிலா முழுமையாக மறைக்கப்படும் சற்று அரிய நிகழ்வை முழு சந்திர கிரகணம் என்கிறோம். இந்த முழு சந்திர கிரகணம் ஒரே ஆண்டில் அதிக முறை நிகழாது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பௌர்ணமி சீரான இடைவெளிகளில் வரும். ஆனால் எல்லா பௌர்ணமியும் சந்திர கிரகணம் அல்ல'' என சந்திர கிரகணம் குறித்து அடிப்படை விளக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குனர்.
🌟 சந்திர கிரகணத்தால் மனிதர்கள் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என கேட்டபோது, '' பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் சந்திர கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின்போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே இன்றைய சந்திர கிரகணத்தின்போதும் கடல் அலை சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை'' என்றார் சவுந்திரராஜ பெருமாள்.
🌟 இன்றைய சந்திர கிரகணத்தின் இன்னொரு சிறப்பாக கருதப்படுவது சூப்பர் மூன் என சொல்லப்படும் நிலவு பெரிதாக, அதிக பிரகாசத்துடன் தெரியும் தினத்தில் சந்திர கிரகணம் வருவதாகும். இன்றைய தினம் நீல நிலா தினம், சூப்பர் மூன், சந்திர கிரகணம் மூன்றும் ஒரே சமயத்தில் வருகிறதா என்பது குறித்து சவுந்திரராஜ பெருமாள் பிபிசி தமிழிடம் விளக்கியுள்ளார்.
🌟 '' சந்திரன் பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சில சமயங்களில் புவிக்கு நெருக்கமாக சந்திரன் வரக்கூடும். அதாவது மூன்று லட்சத்து 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலேயே நிலவு வந்துவிடும் அதன்பிறகு 4 லட்சத்து ஆறாயிரம் கிலோ மீட்டர் வரை விலகி செல்லும். அதாவது சுமார் ஐம்பாதாயிரம் கிலோ மீட்டர் வித்தியாசத்தில் 27 நாட்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு நெருங்கி வருவதும் விலகிச் செல்வதுமாக இருக்கும்.
🌟 அதன்படி பார்த்தால் நேற்றைய தினம் (30.01.2018) அன்றுதான் நிலவு பூமியிடம் இருந்து மிக அருகில் அதாவது 3 லட்சத்து 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இன்றைய தினம் 3 லட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு இருக்கும். லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூர அடிப்படையில் பார்க்கும்போது இது மிகப்பெரிய தூர அளவு வித்தியாசம் அல்ல.
🌟 நாளை தினம் புவிக்கு அருகில் நிலவு இருப்பதால் சற்று பெரிதாகவும் சற்று கூடுதல் பிரகாசத்துடன் தெரியும். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. நாளைய தினம் சூப்பர் மூன் தினம் என சொல்லமுடியாது. எனினும் புவிக்கு கிட்டத்தட்ட மிக அருகில் நிலவு வரும் தினத்திலும், நீல நிலா தினத்திலும், முழு சந்திர கிரகணம் நடைபெறுவதாலும் குளிர் காலத்தில் இத்தகைய அரிய நிகழ்வு நடப்பதாலும் அதிக மேக மூட்டங்கள் இன்றி தெளிவாக பார்க்க முடியும். இத்தகைய சிறப்புகள் இன்றைய தினத்தில் நிகழவுள்ளன.'' என்றார்.
🌟 எந்தெந்த இடங்களில் இருந்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம் என கேட்டபோது '' சந்திர கிரகணம் மாலை 5.18க்கு துவங்குவதாக இருந்தாலும் சென்னையில் மாலை 6.05-இலும் கோயமுத்தூரில் மாலை 6.18 -இலும்தான் சந்திரன் உதயமாகிறது. அதனால் சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திர கிரகணமாக உதயமாகும். சென்னையில் இருப்பவர்கள் கடற்கரைகளில் இருந்து பார்த்தால் இன்று மாலை சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திரகிரகணமாக இருப்பதை பார்க்கலாம்.
🌟 தொலைநோக்கி கொண்டு மட்டுமே பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை வெறும் கண்களிலும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுற்றுவட்டார பகுதிகள் ஆரஞ்சு அல்லது செஞ்சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்க்கலாம். முழு கிரகணம் நடக்கும்போது இந்த நிறமாற்றம் ஏற்படும். எந்த நேரத்தில் இந்த நிறமாற்றங்கள் தோன்றும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆகவே இன்றைய தினம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🌟 முழு கிரகணம் தோன்றும் போது நிறமாற்றம் ஏற்படுவதென்பது வளிமண்டல மாசு அளவை பொறுத்தது. கிரகணத்தின் போது மாசு காரணமாக வளி மணடலத்தில் அதிக துகள்கள் இருந்தால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிற கூறு அதிகமாக இருக்கும் அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். மாசு குறைவாக இருந்தால் சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தெரியும். எனவே வளிமண்டல மாசுபாட்டையும் இதனை வைத்து கண்டறிய முடியும்.
🌟 இந்தியா முழுமையாகவே நாளை சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவுக்கு கிழக்கில் உள்ள சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் முழுமையாக பார்க்க முடியும்'' என விரிவாக விளக்கிச் சொன்னார் சவுந்திர ராஜன்.
🌟 இந்தியா, சிங்கப்பூர் , மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த சந்திர கிரகணத்தை இன்று நேரில் கண்டு ரசிக்கலாம்.